கர்நாடகாவில் குரங்குகளிடமிருந்து தோட்டத்தைப் பாதுகாக்க நாயை ‘புலி’யாக மாற்றிய விவசாயி: வித்தியாச முயற்சிக்கு கைமேல் பலன்

புலியை போல வரிகள் வரையப்பட்ட தனது நாயுடன் விவசாயி ஸ்ரீகாந்த்
புலியை போல வரிகள் வரையப்பட்ட தனது நாயுடன் விவசாயி ஸ்ரீகாந்த்
Updated on
1 min read

கர்நாடகாவில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் குரங்குகளின் அட்டகாசத்தை தடுக்க நாயை புலி போல மாற்றியதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. நாயை புலியாக நினைத்து குரங்குகள் அவரது தோட்டத்தின் பக்கமே வருவதில்லை என கூறுகிறார் அந்த வித்தியாச விவசாயி.

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகேயுள்ள நலூரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காந்த். இவர் தனது தோட்டத்தில் பாக்கு, வாழை, காப்பி உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகிறார். இந்த தோட்டம் மலையடிவாரத்தில் இருப்பதால் அவ்வப்போது குரங்குகளும், பன்றிகளும் தோட்டத்துக்குள் நுழைந்து பயிர்களையும், விளைச்சலையும் நாசப்படுத்தியுள்ளன.

இதைத் தடுக்க காந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குரங்குகளை பயமுறுத்தும் வகையில் கோவாவிலிருந்து புலி பொம்மைகளை வாங்கி வந்து தோட்டத்தில் வைத்துள்ளார். தொடக்கத்தில் பொம்மை புலிகளை கண்டு பயந்த குரங்குகள், பின்னர் அவற்றை பொம்மை என்று கண்டுபிடித்தன. இதையடுத்து, மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன.

இந்நிலையில், காந்த் வித்தியாசமாக யோசித்து தனது வீட்டு நாயை புலியாக மாற்ற முடிவெடுத்தார். அதாவது, நாய்க்கு மனிதர்கள் தலைமுடிக்கு பூசும் சாயத்தை (டை) கொண்டு, புலி போல வரி வரியாக வரைந்துள்ளார். பின்னர் இந்த நாயை அவ்வப்போது தோட்டத்துக்குள் வலம்வர வைத்து, குரங்குகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாயை புலி என நம்பி அச்சமடைந்த குரங்குகள் அண்மைக் காலமாக தனது தோட்டத்தின் பக்கமே வருவதில்லை என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் காந்த். இதனால் விளைச்சலுக்கு எந்த குந்தகமும் ஏற்படுவதில்லை. காந்தின் இந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளதால், அவரது கிராமத்தை சேர்ந்த மற்ற விவசாயிகளும் இதே பாணியை பின்பற்றி, நாய்க்கு புலி வேஷம் போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாயை புலியாக மாற்றி வித்தியாச முயற்சி மேற்கொண்ட காந்த்தை விவசாயிகள் வெகுவாக பாராட்டுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in