Published : 05 Dec 2019 07:56 am

Updated : 05 Dec 2019 08:01 am

 

Published : 05 Dec 2019 07:56 AM
Last Updated : 05 Dec 2019 08:01 AM

நேற்று ஜெஸ்மி...இன்று லூசி! தொடரும் கன்னியாஸ்திரிகளின் கண்ணீர்...: ‘கர்த்தாவின்டே நாமத்தில்’ புத்தகத்தால் சர்ச்சையில் கிறிஸ்தவ சபை - வரும் 9-ம் தேதி எர்ணாகுளத்தில் வெளியாகிறது

lusi-book-release
லூசி எழுதிய புத்தகம்

கேரள கன்னியாஸ்திரி லூசி ‘கர்த்தாவின்டே நாமத்தில்’ என்ற தலைப்பில் திருச்சபைக்குள் தனக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் வரும் 9-ம் தேதி எர்ணாகுளத்தில் வெளியிடப்படவுள்ள நிலையில் அதன் மையக்கரு கேரளத்தின் பேசுபொருள் ஆகியுள்ளது.

33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்து சபையில் இருந்து விலகிய ஜெஸ்மி, ‘ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு’ என்ற பெயரில் சபைக்குள் நடந்த பாலியல் சீண்டல்களை எழுதியிருந்தார். அதிலிருந்து பத்துஆண்டுகள் கழித்து கன்னியாஸ்திரி லூசி தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை ‘கர்த்தாவின்டே நாமத்தில்’ என்ற பெயரில் புத்தகமாக்கியுள்ளார். சபையின் மறுபக்கத்தை பேசுவதாக சொல்லப்படும் இந்தப் புத்தகம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெஸ்மி, லூசி இருவருமே சீரோ மலபார் திருச்சபையில் கன்னியாஸ்திரிகளாக இருந்தவர்கள். சீரோ மலபார் திருச்சபை அண்மைக்காலமாக தொடர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிவரும் நிலையில் ‘கர்த்தாவின்டே நாமத்தில்’ புத்தகத்தின் வெளியீட்டுக்காகவும், அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்துக்காகவும் காத்துக்கிடக்கின்றனர் மலையாளிகள். நேற்று முதல் புத்தகத்துக்கு இணையவழி முன்பதிவும் தொடங்கியுள்ளது.

குற்றச்சாட்டில் சிக்கிய பிஷப்

சீரோ மலபார் சபையில் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முலக்கல். இவர், கேரளாவில் உள்ள கான்வென்டில் தன்னை 2014 முதல் 2016 வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார் என்று கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஆண்டு புகார் சொன்னார். இது நாட்டையே உலுக்கினாலும் பிராங்கோ முலக்கல் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவரை கைதுசெய்யக் கோரி கொச்சியில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம் நடத்தினர். வாடிகனுக்கும் புகார் அனுப்பிய நிலையில், பிராங்கோ தனது பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். பிறகு அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் அவருக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா மர்மமான முறையில் இறந்தார். இதைத்தொடர்ந்து பிராங்கோவுக்கு எதிராக திருச்சபையிலும் போராட்டம் வெடித்தது.

லூசியின் சுயசரிதை

போராட்டத்தை முன்னின்று நடத்திய அனுபமா என்ற கன்னியாஸ்திரியை இடமாற்றம் செய்தது சபை. போராட்டக் களத்தில் உடனிருந்த கன்னியாஸ்திரி லூசி களப்புராவை கடந்த மே மாதம் சபையை விட்டே நீக்கினர். அவருக்கு தொடர் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதும் சபையில் இருந்து விலகாமல் போராட்டங்களை முன்னெடுத்ததால் சபை இப்படியான முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சபையில் தனக்கு நேர்ந்தது, தான் கண்டது என அனைத்தையும் ‘கர்த்தாவின்டே நாமத்தில்’ என்ற பெயரில் புத்தகம் ஆக்கியுள்ளார் லூசி. அவர் சொல்லச் சொல்ல பத்திரிகையாளர் ராமதாஸ் என்பவர் இதை தொகுத்து எழுதியுள்ளார். மலையாள வார இதழ் ஒன்று, இதை தொடராகவும் வெளியிட்டது.

பிராங்கோ முலக்கல்
Caption

அதேவேளையில் லூசி மீது புகார்களை பட்டியலிடுகிறது சீரோ மலபார் சபை. சபையின் அனுமதியின்றி லூசி புத்தகம் வெளியிடுகிறார், வங்கிக் கடன் பெற்று கார் வாங்கியுள்ளார், ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார், சபை கட்டுப்பாட்டை மீறி கன்னியாஸ்திரி உடையின்றி சாதாரண உடையில் முகநூலில் படம் போடுகிறார் என்கிறது இச்சபை.

ஏன் எழுதினேன்?

இந்த புத்தகம் குறித்து லூசி கூறியதாவது: முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு எதிரான பாலியல் வழக்கில் நானும் ஒரு சாட்சியாவேன். அவருக்கு எதிராக நான் கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி சொல்லச் சொல்லி எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். பிராங்கோவுக்கு எதிரான பாலியல் வழக்கு கடந்த சனிக்கிழமை கோட்டயம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போதுகூட அவர் சிரித்த முகத்துடன் வந்து கலந்துகொண்டார். வழக்கின் விசாரணையை வரும் 6-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அன்றைய நாளில் குற்றச்சாட்டை பதிவு செய்தல் என்னும் சட்டப்படியான நிகழ்வு நடக்கவுள்ளது. அதன் பின்னரே வழக்கின் விசாரணை தொடங்கும் என்பதால் என் வாதத்தை மாற்றச்சொல்லி நெருக்கடி கொடுக்கின்றனர். பாதுகாப்பற்ற நிலையில் நான் வாழ்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

எப்படிப்பட்ட சபை அது?

இந்தியாவில் முதன்முதலில் புனிதர் பட்டம் பெற்ற அல்போன்சா, கன்னியாஸ்திரியாக இருந்தது சீரோ மலபார் சபையில்தான்!1910-ல் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த அல்போன்சா, கேரளத்தில் கல்வி வெளிச்சம் பாய்ச்சியவர். அண்மையில் புனிதர் பட்டம் பெற்ற மரியம் திரேசியாவும் சீரோ மலபார் சபையில் தான் கன்னியாஸ்திரியாக இருந்தார். திருக்குடும்ப சபையை தொடங்கிய மரியம் திரேசியா, கேரளத்தில் பெண்கல்விக்கு வித்திட்டு புரட்சி செய்திருந்தார்.


பிராங்கோ முலக்கல்லூசி எழுதிய புத்தகம்கர்த்தாவின்டே நாமத்தில்சர்ச்சையில் கிறிஸ்தவ சபைஜெஸ்மிலூசிலூசியின் சுயசரிதை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author