

சூடான் தீ விபத்தில் காணாமல் போன 3 தமிழர்கள், காயமடைந்த 3 தமிழர்களின் விவரங்களை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
காணாமல் போன 3 தமிழர்கள்
சூடான் தீ விபத்தில் சிக்கி 3 தமிழர்களைக் காணவில்லை. அவர்கள் வெங்கடாசலம், ராமகிருஷ்ணன், ராஜசேகர் எனத் தெரியவந்துள்ளது. ராமகிருஷ்ணன் என்பவர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்த 3 தமிழர்கள்
ஜெய்குமார், பூபாலன், முகமது சலீம் ஆகிய 3 தமிழர்களும் தீ விபத்தில் சிக்கி காயமடைந்ததாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இவர்களில் ஜெய்குமார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூபாலன், முகமது சலீம் ஆகிய இருவரும் பொது சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சூடான் நாட்டின் கைபேசி எண்ணான +249-921917471-ல் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய இந்தியர்கள் குறித்த விவரத்தை அறிந்து கொள்ளலாம் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நடந்தது என்ன?
சூடான் தலைநகர் கார்ட்டூமில் அமைந்துள்ள சலோமி செராமிக் தொழிற்சாலையில் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். இதில் இந்தியர்கள் மட்டுமே 53 பேர் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை நடந்த இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி மற்றும் தீ விபத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 23 பேர் பலியானதாகவும் 130 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''சூடான் செராமிக் ஆலை தீ விபத்தின் போது 53 இந்தியர்கள் பணியில் இருந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன'' என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
இந்நிலையில் சூடான் தீ விபத்தில் காணாமல் போன 3 தமிழர்களின் நிலையைக் கண்டறிய வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ''சூடான் தலைநகர் கார்ட்டூமில் அமைந்துள்ள செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழர்கள் 3 பேர் காணாமல் போனதாகக் கூறப்படுவதால், உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். சூடானில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களின் நிலையை அறிய வெளியுறவுத் துறை மூலம் விவரங்களைக் கண்டறிய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.