Last Updated : 04 Dec, 2019 07:37 PM

 

Published : 04 Dec 2019 07:37 PM
Last Updated : 04 Dec 2019 07:37 PM

பிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கனிமொழி யோசனை

புதுடெல்லி

பிரதம மந்திரி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார். இதற்காக, கலைஞரின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மத்திய அரசுக்கு யோசனை வழங்கினார்.

இது குறித்து தூத்துக்குடி தொகுதி எம்.பி.யான கனிமொழி பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாவது:

''மத்திய அரசு சார்பில் மகப்பேறு பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி திட்டம் முதலில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருந்தது.

பிறகு அது, பிரதம மந்திரி மகப்பேறு நிதி உதவித் திட்டமாக மாற்றப்பட்டது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருந்த வரையில் 2013 ஆம் ஆண்டு மகப்பேறு நிதியுதவித் தொகை 6 ஆயிரம் ரூபாயாக இருந்தது.

அதன்பின் பிரதம மந்திரி மகப்பேறு நிதியுதவித் திட்டமாக மாற்றப்பட்ட பின் வழங்கப்படும் நிதி உதவி 5000 ரூபாயாக குறைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் முதல் குழந்தை பெறுதலுக்கு மட்டுமே நிதி உதவி என்று திட்டத்தின் வரம்பும் சுருக்கப்பட்டுவிட்டது.

2017-18 பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக ரூ.2,700 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் 2018-19 பட்ஜெட்டில் மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கான தொகை 1,200 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த நிதி ஆண்டில் இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தத் தேவையான மொத்த தொகை 56 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதன் மீது 6 வட இந்திய மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதன் தகவல்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பெற்ற தரவுகளின்படி பிரதம மந்திரி மகப்பேறு நிதி உதவித் திட்டம் ஒட்டுமொத்த பயனாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினரையே சென்று சேர்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கான விண்ணப்ப முறையும் பெரும் சிக்கலாக இருக்கிறது. 23 பக்கங்கள் கொண்ட விண்ணப்பத்தோடு குறிப்பிட்ட பெண்ணின் ஆதார் கார்டு, கணவரின் ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், ஆதார் கார்டு எண், வங்கிக் கணக்கு இணைக்கப்பட்ட ஆவணம், திருமணச் சான்று என ஏகப்பட்ட ஆவணங்களும் கேட்கப்படுகின்றன.

இதனாலேயே இந்தத் திட்டம் பயனாளிகளுக்கு உகந்ததாகக் கருதப்படவில்லை. எனவே இத்திட்டத்தின் நெறிமுறைகளைப் பயனாளிகளுக்கு உகந்த திட்டமாக மாற்றியமைக்க வேண்டும்.

இதற்கு தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞர் அறிமுகப்படுத்திய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் மிகச் சிறந்த வெற்றிகரமான முன் மாதிரியாக இருக்கிறது. இத்திட்டத்தின்படி முதல் இரு பிரசவங்களுக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தைப் பின்பற்றி பிரதமர் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை பயனாளிகளுக்கு உகந்த திட்டமாக மாற்றியமைக்க வேண்டும்''.

இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x