

நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறை, தாக்குதலைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், கும்பல் தாக்குதலைத் தடுக்க ஐபிசி, சிஆர்பிசியில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்காக, சிறப்புக் குழுவை அரசு அமைத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
நாடு முழுவதும் பசு மாடுகளை வாகனத்தில் கொண்டு செல்வோரை மாட்டிறைச்சி விற்பனை செய்வோர் என நினைத்து சிலர் அடித்துக் கொல்லும் சம்பவம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உ.பி. உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்தது. இதைத் தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கும்பல் தாக்குதல், வன்முறையைத் தடுக்க நாடாளுமன்றத்தில் தனிச்சட்டம் இயற்றலாம் என்று ஆலோசனை தெரிவித்தது.
இந்நிலையில் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கும்பல் வன்முறையைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்கையில், "கும்பல் வன்முறையைத் தடுக்க இந்தியக் குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) ஆகியவற்றில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்காக, தனிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் கிடைத்தவுடன் திருத்தம் செய்யும் பணிகளை அரசு தொடங்கும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மனதில் வைத்துதான் அரசு செயலாற்றி வருகிறது.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்களுக்கும் எழுதிய கடிதத்தில் அனுபவம் நிறைந்த போலீஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி ஐபிசி, சிஆர்பிசியில் சட்டத் திருத்தம் கொண்டு வர கோரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பேசுகையில், " இந்தியக் குற்றவியல் சட்டத்தில் கும்பல் வன்முறை தொடர்பாகத் தனியாக விளக்கம் ஏதும் இல்லை. ஆனால், கும்பல் தாக்குதல் சம்பவங்களை நாம் ஐசிபி பிரிவு 300,302 ஆகிய பிரிவுகளில் சேர்த்து விசாரிக்கலாம்.
302 பிரிவு என்பது கொலைக்குற்றமாகும். இதில் ஒருவருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனையும், வாழ்நாள் சிறையும் வழங்க முடியும், அபராதமும் விதிக்க முடியும். மேலும் ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றமாகும்.
கும்பல் வன்முறையைத் தடுக்க மணிப்பூர், ராஜஸ்தான் மாநில அரசுகள் தனியாகச் சட்டம் இயற்றியுள்ளன. மேலும், தனியாகச் சட்டம் இயற்றுவது தொடர்பாகப் பரிந்துரைகளை அளிக்க மூத்த அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.