Last Updated : 04 Dec, 2019 05:50 PM

 

Published : 04 Dec 2019 05:50 PM
Last Updated : 04 Dec 2019 05:50 PM

கால்நடை பெண் மருத்துவர் குடும்பத்தினரைச் சந்திக்க நேரமில்லை; திருமணத்துக்குச் செல்ல நேரமிருக்கிறதா? தெலங்கானா முதல்வருக்கு திருப்தி தேசாய் கேள்வி

ஹைதரபாத்தில் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட கால்நடை பெண் மருத்துவரின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க தெலங்கானா முதல்வருக்கு நேரமில்லை. ஆனால், திருமணத்துக்கு செல்ல நேரமிருக்கிறதா என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் கடந்த மாதம் 28-ம் தேதி இரவு 4 இளைஞர்களால் கொடூரமாகப் பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திலும் இந்தச் சம்பவம் எதிரொலித்து பெண்களுக்கு எதிரான வன்முறைக்குத் தீர்வு காணும் வகையில் சட்டங்களை இயற்றவும் கட்சிப் பாகுபாடின்றி கோரிக்கை எழுந்தது.

இந்தக் கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கால்நடை மருத்துவரின் குடும்பத்தைச் சந்தித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆறுதல் தெரிவித்தார். ஆனால், டிஆர்எஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் இன்னும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், பூமாதா பிரிகேட் அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஹைதராபாத் வந்தார். முதல்வர் சந்திரசேகர் ராவின் இல்லத்தின் முன்பு இன்று போராட்டம் நடத்த முடிவு செய்து தனது ஆதரவாளர்களுடன் திருப்தி தேசாய் முயன்றார். ஆனால், போலீஸார் திருப்தி தேசாய் மற்றும் அவரின் ஆதரவாளர்களைத் தடுத்து நிறுத்தி, கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், "முதல்வர் சந்திரசேகர் ராவைச் சந்திக்க எந்தவிதமான முன் அனுமதியும் திருப்தி தேசாய் பெறவில்லை. திடீரென முதல்வரின் வீட்டு முன் போராட்டம் நடத்த முயன்றார். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்துள்ளோம்" எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே திருப்தி தேசாய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்னும் ஆறுதல் தெரிவிக்க நேரமில்லை. ஆனால், திருமணத்தில் கலந்து கொள்ள மட்டும் அவருக்கு நேரமிருக்கிறதா?

இந்தக் கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்வரிடம் பதில் கேட்க இருக்கிறோம். ஆனால், இந்தச் சம்பவத்தை தெலங்கானா அரசு சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறது.

விரைவு நீதிமன்றத்தை தெலங்கானா அரசு உருவாக்கி, இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும், முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு திருப்தி தேசாய் கடிதமும் எழுதியுள்ளார். அதில், "கால்நடை பெண் மருத்துவர்களைக் கொலை செய்த குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x