

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தங்கள் மகள்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதி போலீஸில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதில், ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை நிர்வகித்து வந்த 2 பெண்களையும் போலீஸார் கைது செய்தனர். ஆசிரமம் மூடப்பட்டுள்ளது.
நித்யானந்தா மீது கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக குஜராத் போலீஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற நித்யானந்தா மத்திய ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டு அதற்கான கொடியையும் வெளியிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நாடு குறித்து www.kailaasa.org என்ற இணையதளத்தில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் உலகெங்கும் வாழும் இந்துக்கள் குறிப்பாக ஆதி சைவர்களுக்காக ஒரு நாட்டை உருவாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தை காப்பாற்றவும், பின்பற்றவும் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் அங்கு வந்து குடியேறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் அதிகாரபூர்வ மதம் இந்து மதம் ஆகும். சிவபெருமானையும், நந்தியையும் கொண்ட கொடியே கைலாசா நாட்டின் கொடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிஷப துவஜம் எனவும் பெயரிப்பட்டுள்ளது.
ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவை கைலாசா நாட்டின் முக்கிய மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைலாசா நாட்டுக்காக உள்துறை, பாதுகாப்பு நிதி, வர்த்தகம், வீட்டுவசதி, மனிநேய சேவைகள், கல்வி உள்ளிட்ட துறைகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.