மாநிலங்களவைக் கூட்டத்தில் சிதம்பரம் பங்கேற்பு எப்போது? நளினி சிதம்பரம் விளக்கம்

காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம்: படம் ஏஎன்ஐ
காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம்: படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீனில் வெளியாக இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உடல்நல சிகிச்சை முடித்த பின்புதான் மாநிலங்களவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பார் என்று அவரின் மனைவி நளினி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர்.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிதம்பரத்தின் காவலை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவைக் கடந்த மாதம் 15-ம் தேதி நிராகரித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பு மேல் முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் கொண்ட அமர்வு விசாரித்து இன்று சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது. 106 நாட்களுக்குப் பின் சிதம்பரம் ஜாமீனில் விடுவிக்கப்பட உள்ளார்.

இந்நிலையில் மாநிலங்களவைக் கூட்டத் தொடரில் நாளையே சிதம்பரம் பங்கேற்பார் என்று அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

அதுகுறித்து சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், "என்னுடைய கணவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
டெல்லி திஹார் சிறையில் இருந்து சிதம்பரம் இன்று மாலை விடுவிக்கப்படுகிறார். அவரின் உடல் நிலை பலவீனமாக இருக்கிறது. அதனால், அதற்கான சிகிச்சையை முதலில் எடுத்துக்கொண்டு அதன் பின்புதான் மாநிலங்களவைக் கூட்டத் தொடரில் சிதம்பரம் பங்கேற்பார்" எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வரும் 13-ம் தேதியுடன் முடிகிறது. இன்னும் 7 நாட்கள் மட்டுமே அமர்வு இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in