

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து அடுத்த வாரம் மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் நலன் கருதியும், நாட்டின் நலன் கருதியும்தான் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. தேசிய நலன் சார்ந்ததுதான் என்று மக்களும் இதை வரவேற்பார்கள்" எனத் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறுகையில், " மதத்தை நம்பியிருப்பவர்களின் தேசியத்தைத் தீர்மானிக்கும் சிந்தனை என்பது பாகிஸ்தானுக்கு உரித்தானது. அதன் அடிப்படையில்தான் பாகிஸ்தான் உருவானது. ஆனால், நாங்கள் எப்போதும் எங்கள் சிந்தனைகள் என்பது மகாத்மா காந்தி, நேரு, மவுலானா ஆசாத், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டது என்று வாதிட்டு இருக்கிறோம். ஆதலால், மதம் ஒருவரின் தேசியத்தைத் தீர்மானிக்க முடியாது.
நம்முடைய நாடு இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமானது. மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சம உரிமை அளிக்கும் தேசம். அதைத்தான் நமது அரசியலமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது. ஆனால், இந்த மசோதா, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறை குறைத்து மதிப்பிடுகிறது" எனத் தெரிவித்தார்.
இந்த மசோதாவை மக்களவையில் அடுத்த 2 நாட்களில் மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரத்தில் நிறைவேற்ற முயற்சிக்கும். ஆனால், இந்த மசோதாவை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
மக்களவையில் மத்திய அரசுக்குப் பெரும்பான்மை இருப்பதால், இந்த மசோதாவை மத்திய அரசு எளிதாக நிறைவேற்றிவிடும். ஆனால், மாநிலங்களவையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிஜூ ஜனதா தளம், டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற மத்திய அரசு முயலும் எனத் தெரிகிறது.
இந்த மசோதாவைக் கடந்த ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்து மக்களவையில் நிறைவேற்றியது. ஆனால், மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு நிலவியதையடுத்து, நிறைவேறவில்லை. ஆனால், இந்த ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள மசோதாவில் பல்வேறு முக்கியத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.