

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
இதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மசோதா, கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து, சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்துள்ளவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதாகும். ஆனால், இந்த மசோதாவைக் கடந்த பாஜக ஆட்சியில் அறிமுகம் செய்தபோது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஒருவருக்குக் குடியுரிமை வழங்குவதை மதத்தின் அடிப்படையில் நம்பிக்கை அடிப்படையில் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த மக்களவை முடிந்ததும் இந்த மசோதா காலாவதியானது. தற்போது மீண்டும் அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவைக் கடந்த ஆட்சியில் அறிமுகம் செய்தபோது காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
ஆனால், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் சந்தித்துப் பேசின.
அப்போது அவர்களிடம் உறுதியளித்த அமித் ஷா, " வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா ஆகியவற்றில் உள்ள பழங்குடி பகுதிகள் அரசியலமைப்பின் 6-வது பட்டியலால் பாதுகாக்கப்பட்டுள்ளன. அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் ஐஎல்பி (இன்னர் லைன் பெர்மிட்) என்ற அம்சத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளதால், குடியுரிமை சட்டத் திருத்தத்தால் பாதிக்கப்படாது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மசோதா வரும் 9-ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. கூட்டத் தொடர் வரும் 13-ம் தேதி முடிகிறது.