

டெல்லியில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் டெல்லி மக்களுக்கு மாதந்தோறும் 15 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். ஆனால் மெட்ரோ ரயிலில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த கால அவகாசம் தேவைப்பட்டதையடுத்து பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை முதல்வர் கேஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.
டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான கேஜ்ரிவால் இலவசத் திட்டத்தை அறிமுகம் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்தநிலையில் மேலும் ஒரு இலவச திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அப்போது வழங்கப்பட்ட வாக்குதியின்படி டெல்லி மக்களுக்கு மாதந்தோறும் 15 ஜிபி டேட்டா இணையதள வசதி இலவசமாக வழங்கப்படும்.
இதற்காக டெல்லி முழுவதும் 11 ஆயிரம் ஹாட்ஸ்பாட் அமைக்கப்படும். வரும் 16-ம் தேதி முதல்கட்டமாக 100 ஹாட்ஸ்பாட்டுகள் தொடங்கி வைக்கப்படும். இதன் மூலம் வைபை வழியாக மக்களுக்கு இலவசமாக இணையதள வசதி வழங்கப்படும்.’’
இவ்வாறு அவர் கூறினார்.