

மகாராஷ்டிர அரசியலில் இருந்து சிவசேனாவை அகற்ற பெரிய அளவில் பாஜக சதி செய்தது. ஆனால் அந்த சதிக்கு சரத் பவார் பலியாகவில்லை என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவேசனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. முதல்வர் பதவியைப் பிரித்துக்கொள்வது தொடர்பாக பாஜகவுக்கும், சிவேசனாவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டபோது, பாஜக சார்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் பேச்சு நடத்தப்பட்டதாகத் தகவல் எழுந்தது. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை.
ஆனால் இதனை சரத் பவார் மறுத்துள்ளார். என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார் மராத்தியில் ஒளிபரப்பாகும் ஒரு சேனலுக்குப் பேட்டி அளித்தார். அதில் பிரதமர் மோடி கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார் என்றும், தான் அதை ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இதுகுறித்து கூறியதாவது:
‘‘மகாராஷ்டிர அரசியலில் இருந்து சிவசேனாவை அகற்ற பெரிய அளவில் பாஜக சதி செய்தது. அந்த சதியில் சரத் பவாரையும் சேர்க்க அந்த கட்சி முயற்சி செய்தது. ஆனால் பாஜகவின் சதிக்கு பவார் பலியாகவில்லை. பாஜகவின் சதியை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம். மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு தான் பின்னடைவு ஏற்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.