Published : 14 Aug 2015 06:22 AM
Last Updated : 14 Aug 2015 06:22 AM

இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள்; மே.வ., உ.பி.யில் அதிகம்

மக்களவையில் நேற்று பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:

176 வெள்ள முன்னறிவிப்பு மையங்கள்

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி:

மழைக்காலங்களில் ஆறுகளில் நீர்மட்டம் உச்சவரம்பைத் தாண்டி அதிகரிப்பது குறித்து அறிவிக்க நாடு முழுவதும் 176 வெள்ள அபாய முன்னறிவிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீர்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மத்திய நீர் ஆணையம், இந்தியாவின் முக்கிய நதிகள் மற்றும் உப நதிகளில் ஏற்படும் வெள்ள அளவை முன்னறிவிப்பு செய்யும் பணியை செய்துகொண்டிருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வானிலை ஆய்வுமையம் அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் மழையளவு கணிக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம்தான், இமயமலை ஆறுகளில் உள்ள பனி ஏரிகள், நீர்நிலைகள், 10 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்புள்ள நீர் நிலைகள் செயற்கைக்கோள் புகைப்படங்களின் உதவியுடன் கண்காணிக்கப்படுகின்றன.

ஹைதராபாத்தில் உள்ள தேசிய ரிமோட் சென்சிங் மையம், செயற்கைக்கோள் உதவியுடன் தற்போதைய வெள்ள நிலவர விவரங்களை வரைபடங்களாக அளிக்கிறது.

புதிய முறையில் ‘டோல்’ கட்டணம்

சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:

ஏற்கெனவே அரசு நிதியில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட காலத்துக்கு சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலித்து, அரசுக்கு வருவாய் ஈட்டும் (டோல் ஆப்பரேட் டிரான்ஸ்பர்) திட்டம் ஆலோசனை அளவில் உள்ளது.

ஜவுளித் துறைக்கு ரூ.500 கோடி

ஜவுளித் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார்:

12-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், ஜவுளித் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டு மேம்பாட்டுத் திட்டம் பொது- தனியார் பங்களிப்பு முறையில் செயல்படுத்தப்படும். மத்திய அரசு, மாநில அரசு, நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட எஸ்பிவி என்ற அமைப்பு ஆகியவை 50:25:25 என்ற விகிதாச்சார அடிப்படையில் இத்திட்டத்தில் முதலீடு செய்யும்.

ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் கழிவை வெளியேற்றும் சாய ஆலை சுத்திகரிப்பு நிலைய திட்டங்களுக்கு ரூ.10 கோடியும், இதர திட்டங்களுக்கு 50 சதவீத நிதி (அதிகபட்சம் ரூ.75 கோடி) மத்திய அரசு வழங்கும். கடலில் சென்று கலக்கும் திட்டமாக இருப்பின், அதிகபட்சம் ரூ.75 கோடியும், அத்திட்டத்தைப் பொறுத்து வழங்கப்படும்.

63% சோலார் பேனல்கள் சீன இறக்குமதி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல்:

கடந்த ஏப்ரல்- மே மாதங்களில் 3.02 கோடி சோலார் பேனல்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 1.90 கோடி பேனல்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட சோலார் பேனல்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதாவது இறக்குமதி செய்யப்பட்ட 16.15 சோலார் பேனல்களில் 11.35 கோடி பேனல்கள் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. உள்நாட்டில் சோலார் பேனல் உற்பத்தியை அதிகரிக்க உரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

4 லட்சம் பிச்சைக்காரர்கள்

சமூக நீதித்துறை இணையமைச்சர் விஜயல் சம்ப்லா:

இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்களில் 2.2 லட்சம் பேர் ஆண்கள், 1.91 லட்சம் பேர் பெண்கள். அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 81,244 பிச்சைக்காரர்களும், உத்தரப்பிரதேசத்தில் 65,835 பேரும், ஆந்திராவில் 29,723 பேரும், பிஹாரில் 28,695 பேரும் உள்ளனர். அசாம், மணிப்பூர், மேற்கு வங்க மாநிலங்களில் ஆண்களை விட பெண் பிச்சைக்காரர்களே அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x