Published : 04 Dec 2019 09:13 AM
Last Updated : 04 Dec 2019 09:13 AM

நக்சலிசத்தின் முதுகெலும்பை முறித்துள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

நக்சலிசத்தின் முதுகெலும்பை பாஜக தலைமையிலான மத்திய அரசு முறித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் என 13 தொகுதிகளில் கடந்த மாதம் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜாம் ஷெட்பூர் மாவட்டத்தில் பழங்
குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்து வருகிறார்.

நேற்று குந்தி பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாடு முழுவதும் நல்லாட்சியை வழங்கி வருகிறது. அடிப்படைத் தேவைகளை நாட்டு மக்கள் பெறுவதே எங்களது லட்சியம். ராமர் இளவரசராக அயோத்தியை விட்டு 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். வனப்பகுதிகளில் ஆதிவாசி மக்களுடன் வாழ்ந்துப் பழகிய பின்னர் ‘மரியாதை புருஷோத்தமன்’ ஆக மீண்டும் அயோத்திக்கு வந்து நாட்டில் ஆட்சி புரிந்தார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி இங்கு ஆட்சி செய்தபோது முதல்வரின் நாற்காலி விலைக்கு விற்கப்பட்டது. அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஊழலும் கொள்ளையும்தான் முக்கிய செய்திகளாக வந்தன. அடிக்கடி முதல்வர்கள் மாறிக் கொண்டே இருந்தனர். மாநிலத்தில் அப்போது நல்லாட்சி நடைபெறவில்லை. மோசடி ஆட்சிதான் நடந்தது. காங்கிரஸைச் சேர்ந்த பல தலைவர்கள் இன்னும் ஊழல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி அரசியல் வஞ்சகம் மற்றும் துரோகத்தின் அடிப்படையிலானது. பாஜகவின் அரசியல் மக்கள் சேவையை அடிப்படையாக கொண்டது. எங்கள் ஆட்சிக் காலத்தில் நக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது.

பாஜக மீது நம்பிக்கை

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் பதிவான வாக்கு சதவீதத்தை வைத்து பார்க்கும்போது பாஜக மீதும் தாமரை சின்னத்தின் மீதும் மக்கள வைத்துள்ள நம்பிக்கை மிக தெளிவாக தெரிகிறது. இந்த மாநிலத்தின் முன்னேற்றத்தை பாஜக ஆட்சியால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என ஜார்க்கண்ட் மக்கள் நம்புகின்றனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக தீர்வு கண்டுள்ளோம். யாருமே தொடுவதற்கு அஞ்சிய காஷ்மீர் விவகாரத்தில், 370-வது பிரிவை நீக்கி அங்கு அமைதி நிலவ வழி செய்துள்ளோம். மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி அப்பகுதி மக்கள் நலமுடன் வாழ நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஜார்க்கண்டில் ரகுவர்தாஸ் தலைமையிலான பாஜக ஆட்சி சிறப்பான நிர்வாகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து நல்லாட்சியை அந்த அரசு வழங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x