

கப்பல் உடைப்பு மற்றும் மறுசுழற்சி மசோதா மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) எம்.பி.யான சு.வெங்கடேசன் இன்று மக்களவையில் பேசினார். அப்போது அவர், இந்த மசோதா பெரு நிறுவனங்களின் நலனுக்காக கடல் வளத்தைச் சீரழிக்க உதவும் என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து மக்களவையில் மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் பேசியதாவது:
''டெல்லியினுடைய சுற்றுச்சுழல் பாதிப்பின் தொடர்ச்சியாக இந்த மசோதாவையும் நாம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். முக்கியமாக வணிகத்திற்காக லாப வேட்கைக்காக இந்திய இயற்கை வளங்களை பெறுநிறுவனங்களுக்காகப் பலி கொடுக்கிற இந்த ஆட்சியினுடைய பல மசோதாக்களின் தொடர்ச்சியாக நான் இந்த மசோதாவைப் பார்க்கிறேன்.
குறிப்பாக, மேற்கு உலக நாடுகள் வளர்ந்த நாடுகளில் கப்பல் உடைக்கும் தொழில்கள் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. அதற்குக் காரணம் அந்த நாட்டினுடைய சுற்றுச்சூழலைப் பற்றி அங்கே இருக்கிற விழிப்புணர்வும் சட்டங்களும் காரணம்.
ஆனால், இன்றைக்கு உலகத்தில் ஏறக்குறைய 900 கப்பல்கள் ஒரு வருடத்திற்கு உடைக்கப்படுகின்றன என்றால் அவற்றில் ஏறக்குறைய 70 சதவீத க்ரீ கப்பல்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் உடைக்கப்படுகின்றன.
இது இந்தியா கடல் வளத்தை மிகப் பெரிய அளவுக்கு மாசுபடுத்துகிற ஒரு சுழலை உருவாக்குகிறது. இங்கே வடசென்னையைச் சேர்ந்த உறுப்பினர் கலாநிதி வீராசாமி சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மிக அழகாகக் கூறினார்.
பிரதமர் மோடியின் சொந்த ஊரான அலாங்கில் உள்ள அலாங் துறைமுகத்தில் 90 சதவீதக் கப்பல்கள் உடைக்கப்படுகின்றன.
இந்தியாவில் சுற்றுச்சூழலில் மிக மாசடைந்த நகரமாக இருக்கிற பட்டியிலில் அலாங் மிக முக்கிய இடத்தில் இருக்கின்றது. தன்னுடைய சொந்த ஊரினுடைய சுற்றுச்சூழலையே சரிசெய்ய முடியாத நிலையில் பிரதமர் மோடி இருக்கிறாரா? என்ற கேள்வியை நாங்கள் இங்கு எழுப்ப விரும்புகிறோம்.
தன்னுடைய சொந்த ஊரினுடைய நிலைமை அப்படி இருக்கிறது. இந்தியாவின் தலைநகரின் நிலைமை இப்படி இருக்கிறது, சுற்றுச்சூழல் குறித்து மிக மோசமான நிலையை இந்தியா சந்தித்துக்கொண்டு இருக்கிற பொழுது இது போன்ற மசோதாக்களை நீங்கள் கொண்டு வருவது மிக அதிர்ச்சியை உருவாக்குகிறது.
இந்த மசோதாவினுடைய அடிப்படைப் பிரச்சினையாக கருதுவது ஒன்று தான். இந்த மசோதாவின் அடிப்படையில் அனுமதி கேட்கிறவர்களுக்கு 15 நாட்களுக்குள் அரசு முறையான அனுமதி கொடுக்கவில்லை என்றால் அனுமதி கொடுத்துவிட்டதாக அர்த்தம் என எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்கிறது.
இது மிக ஆபத்தானது . இந்தியாவில் பல இடங்களில் ஏற்பட்டு இருக்கிற சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு இந்த விதி முன்னுதாரணமாக இருக்கிறது என்பதை நான் சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றேன்.
அபாயகரமான பொருள்
இரண்டாவது அபாயகரமான பொருட்கள் என்று இந்த மசோதாவில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அது என்ன அபாயகரமான பொருட்கள் என்று குறிப்பிடவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
10 லட்சம் ரூபாய் அபராதம்
மூன்றாவதாக மிக முக்கியமாக இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு அபாரதம் ரூ.5 லட்சம் அல்லது ரூ.10 லட்சம் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் இந்தத் தொழிலிலே சம்பந்தப்பட்டது பல நூறு கோடி ரூபாய்.
பலநூறு கோடி ரூபாய் லாபம்
பல நூறுகோடி ரூபாய் லாபம் சம்பாதிப்பவர்கள் ஐந்து லட்சம் அபாரதத்தை விதித்துவிட்டு சம்பாதிப்பதிலே எந்தவித தயக்கமும் இருக்கப் போவதில்லை. இது குஜரத்தைச் சார்ந்த அல்லது சில பெரு நிறுவனங்களின் நலனுக்காகக் கொண்டு வருகிறீர்களோ என்று நாங்கள் இங்கு நினைக்கிறோம்.
பெருநிறுவனங்களின் நலனுக்கானது
இறுதியாக எந்த தனி நபரோ இதன் மீது வழக்குத் தொடுக்க முடியாது. அரசு அதிகாரிகளின் மீது வழக்குத் தொடுக்க முடியாது என்றால் இந்த சட்டம் அப்பட்டமாக பெருநிறுவனங்களின் நலனுக்கானது என்பதை இங்கே சுட்டிக்காட்டி விரும்புகின்றேன்.
அடகு வைக்கும் சட்டங்கள்
இறுதியாக இந்திய வளங்களைப் பெரு நிறுவனங்களின் நலனுக்கு அடகு வைக்கிற இது போன்ற சட்டங்களை இந்த நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்''.
இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்தார்.