

தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்களை இயக்க மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தியது. இதை அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஆர்.வைத்திலிங்கம் பூஜ்ஜிய நேரத்தில் பேசினார்.
இது குறித்து மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. ஆர்.வைத்திலிங்கம் பேசியதாவது:
''தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் தஞ்சாவூர் ஒரு பழமையான நகரமாகும். இந்த நகரில் உலகப் பிரசித்தி பெற்ற பிரஹதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள நவக்கிரக ஆலயங்களுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். தஞ்சாவூர் தட்டு, ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் ஆகியன பிரசித்தி பெற்றவை ஆகும்.
சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியை விழுப்புரம் கடலூர் மற்றும் கும்பகோணம் வழியாக இணைக்கும் முக்கிய ரயில் பாதையில் இந்த தஞ்சாவூர் ரயில் சந்திப்பு அமைந்துள்ளது. முக்கிய ரயில் பாதையும் தஞ்சாவூர் ரயில் நிலையமும் 1880 ஆம் ஆண்டே செயல்பாட்டுக்கு வந்துவிட்டபோதிலும் சில ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதர நாடுகளில் இருந்து மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து ரயில் மூலம் வரும் சுற்றுலாப் பயணிகள் சென்னைக்கு செல்ல வேண்டி இருப்பதால் பெரும் சிரமங்களைச் சந்திக்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக, சென்னை-தஞ்சாவூர் இடையே உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து ராமேஸ்வரம், திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் சில மணித்துளிகள் மட்டுமே தஞ்சாவூரில் நின்று செல்கின்றன.
தஞ்சாவூரில் இறங்கும் ரயில் பயணிகளுக்கு ஒரு சில இருக்கைகள் மட்டும் படுக்கை வசதிக்கான இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுவதால் தஞ்சாவூருக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளும் யாத்ரீகர்களும் பெரும் சிரமங்களைச் சந்திக்கின்றனர். எனவே, சென்னை மற்றும் தஞ்சாவூர் இடையே அதிகரித்து வரும் ரயில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரத்யேக அதிவிரைவு ரயில்களை அறிமுகம் செய்யவேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
திருச்சி, மதுரை, பட்டுக்கோட்டை,திருவாரூர் ஆகிய முக்கிய நகரங்களுக்குச் செல்லும் உள்ளூர் ரயில் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தஞ்சாவூரில் இருந்து பிரத்யேக ரயில்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தார்.
வைத்திலிங்கத்தின் கோரிக்கையை அதிமுகவின் எம்.பி.க்களான எஸ்.முத்துக்கருப்பன் மற்றும் விஜிலா சத்யானந்த் ஆகியோரும் வலியுறுத்துவதாக மாநிலங்களவையில் தெரிவித்தனர்.