

நாட்டிலுள்ள ஆதி திராவிடர், பழங்குடியின விடுதிகளின் தரத்தை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என இன்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார்.
இதுகுறித்து தூத்துக்குடி தொகுதி எம்.பி.யான கனிமொழி இன்று மக்களவையில் பேசியதாவது:
''ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள் தங்கிப் படிக்கின்ற விடுதிகளின் நிலைமை நாடு முழுவதும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1,675 ஆதி திராவிடர் நல விடுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் தங்கியிருக்கிறார்கள். இந்த விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட கூடிய சேவை மிகக் குறைந்த தரத்தில் அமைந்திருக்கின்றது.
விடுதிகளுக்கான அடிப்படை வசதிகளான சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், பாதுகாப்பு, நூலகம் போன்றவை கூட முறையாக இல்லை. மாணவர்களோடு ஒப்பிடும்போது விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகள் இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்த ஒரு நாளிதழின் ஆய்வின்படி தமிழகத்தில் பெரம்பலூரில் 55 மாணவர்களுக்கு இரு அறைகளும், இரு குளியல் அறைகள், கழிவறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களால் இதுபோன்ற சூழலில் இரவில் தூங்கக் கூட முடியவில்லை. நேரத்துக்குப் பள்ளி செல்ல முடியவில்லை என்று புகார் கூறியுள்ளனர்.
ஆதி திராவிடர் விடுதியில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவரின் உணவுக்காக அரசு ஒரு மாதத்துக்கு 900 ரூபாயும், கல்லூரி மாணவரின் உணவுக்காக ஆயிரம் ரூபாயும் மட்டுமே அரசு செலவு செய்கிறது. இவ்வளவு குறைவான தொகையில் மாணவர்களுக்கு எப்படி ஊட்டச்சத்து மிகுந்த உணவினைக் கொடுக்க முடியும்?
எனவே ஆதி திராவிடர் நல விடுதிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.