

நாட்டில் அதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு தவறவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை விமர்சித்ததற்காக, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் பதிலுக்குக் கோஷமிட்டனர். இதனால் மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
மக்களவையில் கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுந்து பேசுகையில், "நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு கிலோ 67 ரூபாய்க்கு வெங்காயத்தை இறக்குமதி செய்து, சந்தையில் கிலோ 130 ரூபாய் முதல் 140 ரூபாய்க்கு விற்கிறது.
பிரதமர் மோடியோ நானும் ஊழல் செய்யமாட்டேன், ஊழல் செய்யவும் விடமாட்டேன் என்று பேசுகிறார். நாட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் அன்றாக வாழ்க்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள் விலையைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. இதற்கு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
உடனே, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுந்து பேசுகையில், "ஆதிர் ரஞ்சன் முதலில் பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் குறித்து விமர்சித்ததற்காக மன்னிப்பு கோர அவருக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும். முதலில் நீங்கள் அவையில் மன்னிப்பு கோருங்கள்" எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் டெல்லிக்கு ஊடுருவியவர்கள் என்று என்ஆர்சி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. சவுத்ரி பேசியிருந்தார். அதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
பாஜக எம்.பி. பூனம் மகாஜன் எழுந்து பேசுகையில், "ஹைதராபாத்தில் பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகக் குரல் கொடுக்கிறோம். ஆனால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது பொறுமையை இழந்து நிர்மலா சீதாராமனை விமர்சித்துவிட்டார். நாட்டின் முதல் பெண் நிதியமைச்சருக்கு எதிராக சவுத்திரியின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கிறேன். இது மோசமான வார்த்தை. இந்த அரசுதான் அதிகமான பெண்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கியுள்ளது
சமூகத்தில் பலவீனமான நிலையில் இருக்கும் பெண்களுக்காக காங்கிரஸ் கட்சி இப்படித்தான் போராடுகிறதா? நினைத்தாலே வருத்தமாக இருக்கிறது. அமைச்சர் நிர்மலா சீதாராமனை நிர்பலா (பலவீனமானவர்) என்று பேசியுள்ளார். உண்மையில் காங்கிரஸ் கட்சிதான் பலவீனம், நீங்கள்தான் பலவீனமானவர்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து பாஜக எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதற்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்களும் முழக்கமிட்டனர். அதன்பின் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.