

தென்பெண்ணை ஆற்றின் நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்கக் கோரி தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. மத்திய அரசிடம் தமிழக அரசு மனு அளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, மத்திய அரசிடம் தமிழக அரசு மனு அளித்துள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே 'யர்கோல்' என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுகிறது. இதைத் தடுக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது,
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசுக்கு உள்ள தனி அதிகாரத்தைப் பயன்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. அதை முதலில் பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தியது.
தென்பெண்ணை ஆற்றுநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசை உரிய கோரிக்கை மனுவுடன் 4 வாரத்துக்குள் அணுக வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி உத்தரவிட்டு, தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், உரிய நிவாரணம் பெற மத்திய அரசை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து, தமிழக அரசுத் தரப்பில் தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி தயாரிக்கப்பட்ட கோரிக்கை மனுவை சீலிடப்பட்ட கவரில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு கொடுத்துள்ளது.