

அரசு நிறுவனங்களை விற்பனை செய்வதில் அவர்கள் திறமைசாலிகள், ஆனால் அவர்களுக்கு எதையும் உருவாக்கத் தெரியாது, ரயில்வேயை விற்று விடுவார்கள் என மத்திய அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ரயில்வே தொடர்பான கணக்கு தணிக்கைத்துறை அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் ரயில்வே ஈட்டும் வருவாயை விட செலவு அது செய்யும் செலவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017- 18-ம் ஆண்டில் இந்த விகிதச்சாரம் 98.44 என்ற சதவீதத்தில் இருப்பதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இது மோசமான நிலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘இந்திய ரயில்வே என்பது நமது நாட்டின் உயிர்நாடி. ஆனால் மத்திய பாஜக அரசு ரயில்வேயை மிக மோசமாக்கியுள்ளது. மற்ற பல அரசு நிறுவனங்களை விற்பனை செய்வதை போலவே மத்திய அரசு ரயில்வே துறையையும் விற்பனையை செய்யத் தொடங்கும். அரசு நிறுவனங்களை விற்பனை செய்வதில் இவர்கள் திறமைசாலிகள். ஆனால் அவர்களால் எதையும் உருவாக்கத் தெரியாது’’ என விமர்சித்துள்ளார்.