

நாம் இருவரும் பணியாற்றலாம் வாருங்கள் என்று பிரதமர் மோடி என்னை அழைத்தார். ஆனால், நான் மறுத்துவிட்டேன் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மனம் திறந்து பேட்டி அளித்தார்.
மகாராஷ்டிராவில் சிவேசனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கூட்டணி சேர்ந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் ஆட்சி அமைத்துள்ளன. முதல்வர் பதவியைப் பிரித்துக்கொள்வது தொடர்பாக பாஜகவுக்கும், சிவேசனாவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டபோது, பாஜக சார்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் பேச்சு நடத்தப்பட்டதாகத் தகவல் எழுந்தது. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார் மராத்தியில் ஒளிபரப்பாகும் ஒரு சேனலுக்குப் பேட்டி அளித்தார். அதில் பிரதமர் மோடி கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார் என்றும், தான் அதை ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதில் சரத் பவார் கூறியதாவது:
''நான் கடந்த மாதம் 20-ம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினேன். அப்போது பேசி முடித்துவிட்டு நான் புறப்பட்டபோது, பிரதமர் மோடி என்னிடம், "நாம் இருவரும் சேர்ந்து பணியாற்றலாமே. அவ்வாறு என்னுடன் நீங்கள் சேர்ந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்" எனத் தெரிவித்தார்.
நான் மறுத்துவிட்டேன். " உங்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புறவு உள்ளது. அது தொடரட்டும். ஆனால் அரசியல்ரீதியாக உறவுகள் ஏற்படுவதற்கு சாத்தியம் இல்லை" என்று தெரிவித்தேன்.
அதற்குப் பிரதமர் மோடி நம்முடைய நோக்கங்கள் ஒன்றும் வேறுபட்டவை அல்ல. வளர்ச்சி, மேம்பாடு, வேளாண்மை, தொழிற்சாலைகளை உருவாக்குதல் போன்றவற்றில் நாம் ஒற்றுமையாகவே இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
என்னுடைய மகள் சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவியும், எனக்குக் குடியரசுத் தலைவர் பதவியும் தருவதாக ஊடகங்களில் வந்த செய்தி அனைத்தும் தவறானவை. அவ்வாறு ஏதும் பேசவில்லை.
அதேபோல தேவேந்திர பட்னாவிஸுக்கு அஜித் பவார் ஆதரவு தெரிவித்துள்ளதாக எனக்குச் செய்தி கிடைத்தவுடன் முதல் நபராக நான்தான் உத்தவ் தாக்கரேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். நான் அவரிடம் நடந்தவை அனைத்தும் தவறானவை. எனக்கு எதிராகப் புரட்சி செய்பவர்களை நிச்சயம் அடக்குவேன் என்று உறுதியளித்தேன். அஜித் பவாருக்கு எனது ஆதரவு இல்லை எனத் தெரிந்ததும் அவருடன் இருந்த 10 எம்எல்ஏக்கள் என்னுடன் திரும்பி வந்துவிட்டார்கள்.
அஜித் பவார் திரும்பி வருவதற்கு என் குடும்பத்தார் அவரிடம் பேசினார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அஜித் பவார் எடுத்த முடிவு என் குடும்பத்தார் யாருக்கும் பிடிக்கவில்லை. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாதது, தவறானது எனத் தெரிவித்தார்கள். என் குடும்பத்தில் மிகப்பெரிய தரப்பினர் அஜித் பவார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்''.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.