

முஸ்லிம்களின் உ.பி. சன்னி மத்திய வஃக்பு வாரியம் கட்டாயத்தின் காரணமாக அயோத்தி வழக்கில் மேல்முறையீடு செய்ய மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அதன் நிர்வாகிகள் மீது ஊழலில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அயோத்தியின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது. இதில் பிரச்சினைக்குரிய நிலம் இந்துக்களுக்கு கிடைத்தமையால் முஸ்லிம் தரப்பினர் அதிருப்தியாக உள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடாக சீராய்வு மனு அளிக்க வேண்டும் என முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான, அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் கூடி முடிவு எடுத்தது. இந்த முடிவை அவ்வழக்கின் மனுதாரர்களில் முக்கியமானவரான உ.பி. சன்னி மத்திய வஃக்பு வாரியம் ஏற்க மறுத்தது.
இதன் பின்னணியில் சன்னி வஃக்பு வாரியத்திற்கு ஏற்பட்ட கட்டாயம் காரணம் எனவும், அதன் பெரும்பாலான நிர்வாகிகள் ஊழலில் சிக்கியிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரை உ.பி. சன்னி வஃக்பு வாரிய ஒரு நிர்வாகக்குழு உறுப்பினர் இம்ரான் மசூத் கான் கூறியுள்ளார்.
இப்பிரச்சினையில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியவர்களில் ஒருவரும் பிரபல வழக்கறிஞருமான இம்ரான் மசூத் கான் கூறும்போது, ''தலைவரான ஜுபர் பரூக்கீ சன்னி வஃக்பு வாரியத்தில் செய்த ஊழல் மீது விசாரணை நடத்தி ஆதாரங்களுடன் சிக்கியுள்ளார். இதனால், அவர் இந்த முடிவை ஒரு கட்டாயத்தின் பேரில் எடுத்துள்ளார். ஊழலில் சிக்கியுள்ளதால் மற்ற பெரும்பாலான உறுப்பினர்களும் ஆதரவளித்துள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இம்ரான் மசூத் கான் மேலும் கூறுகையில், ''சன்னி வாரியத்தின் நிலம், இடுகாடு மற்றும் தர்கா பகுதி போன்றவற்றையும் சட்டவிரோதமாக விற்று பல கோடிகள் பார்த்துள்ளனர். இந்தத் தவறுகளில் இருந்து தப்பவேண்டி, அவர்கள் பாபர் மசூதிக்கு எதிரான தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய மறுக்கின்றனர்'' எனப் புகார் தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானவுடன் கருத்து தெரிவித்த உ.பி. சன்னி வாரியத்தின் தலைவரான ஜுபர் பரூக்கீ, மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அறிவித்திருந்தார். இதற்காக கடந்த மாதம் 26 ஆம் தேதி கூட்டியக் கூட்டத்தில் ஆறு நிர்வாக உறுப்பினர்கள் பரூக்கியின் முடிவிற்கு ஆதரவளித்திருந்தனர்.
இவர்களில் முக்கியமானவர் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏவான தஜீன் பாத்திமா ஆவார். இவரது கணவரும் சமாஜ்வாதி எம்.பியுமான ஆசம்கான், அயோத்தி வழக்கில் இந்து தரப்பினருக்கு எதிராக ஆவேசமாக பேசியவர்.
தஜீன் பாத்திமாவுடன் சேர்த்து பரூக்கிக்கு ஆதரவளித்த மற்றொருவர் முகம்மது ஜுனைத் சித்திக்கீ. ஆசம்கானுக்கு மிகவும் நெருக்கமானவரான சித்திக்கீ அவரது ராம்பூர் தொகுதியைச் சேர்ந்தவர்.
பரூக்கிக்கு ஆதரவளித்த மூன்றாவது முக்கிய நிர்வாக உறுப்பினரான அப்ரார் அகமது, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் நியமிக்கப்பட்டவர். சமாஜ்வாதி எம்.எல்.சியான அப்ரார், யோகியின் சொந்த மாவட்டமான கோரக்பூரைச் சேர்ந்தவர்.
இது குறித்து உ.பி. சன்னி வஃக்பு வாரியத்தின் முடிவை எதிர்த்த இரண்டாவது நிர்வாகக்குழு உறுப்பினரான அப்துல் ரசாக் கான் கூறும்போது, ''அல்லாவிற்காக அமைக்கப்பட்ட நிலத்திற்காக வேறு ஒரு இடம் தேர்வு செய்யக் கூடாது. எனவே, மேல்முறையீட்டின் அவசியத்தை ஏற்க மறுத்ததைக் கண்டித்து நான் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டேன்'' எனத் தெரிவித்தார்.