

நாட்டில் இ-சிகரெட்டுகளைத் தயாரிப்பது, விற்பது, கடத்துவது, பதுக்கி வைத்து இருப்பது ஆகியவற்றைத் தடை செய்யும் மசோதா மாநிலங்களையில் இன்று நிறைவேறியது.
ஏற்கெனவே இந்த மசோதா கடந்த மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டநிலையில் இன்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதா இனிமேல் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர் கையொப்பம் பெற்ற பின் சட்டமாகும்.
இந்த இ-சிகரெட்டை விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ அல்லது பதுக்கினாலோ ஓராண்டு சிறையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். தொடர்ந்து இக்குற்றத்தைச் செய்தால் 3 ஆண்டுகள் சிறையும், அதிகபட்சமாக ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் இ-சிகரெட்டைப் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவருக்கு 6 மாதம் சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
இ-சிகரெட்டுகள் விற்பனை, பதுக்கல், உற்பத்தி ஆகியவற்றுக்குத் தடை விதித்து, கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியது. இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது
மாநிலங்களவையில் இ-சிகரெட் தடை மசோதாவை அறிமுகம் செய்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகையில், " எங்களுக்கு எந்தவிதமான பக்தி நோக்கமும் இல்லை, யார் மீதும் வெறுப்பு இல்லை, மக்களின் சுகாதாரத்தைக் காக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, உறுப்பினர்கள் சிலர் பேசுகையில், " புகையிலை நிறுவனங்களிடம் இருந்து அதிகமான அழுத்தத்தை மத்திய அரசு சந்தித்தது. இ-சிகரெட்டோடு சேர்த்து கச்சா புகையிலை, பாரம்பரிய புகையிலை தொடர்பான பொருட்களையும் தடை செய்ய நெருக்கடி வந்தது" என அறிகிறோம் எனத் தெரிவித்தனர்.
இதற்குப் பதில் அளித்த ஹர்ஸவர்த்தன் " ஒருவேளை அவ்வாறு ஒட்டுமொத்தப் புகையிலைக்கும் தடை கொண்டுவந்தால் நான் உலகிலேயே மகிழ்ச்சியான மனிதராக இருப்பேன்" எனப் பதில் அளித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இ-சிகரெட் தடை மசோதா என்பது, நிகோடின், சில வேதிப்பொருட்களை உட்பொருட்களாகக் கொண்டு புகைப்படிக்கப் பயன்படுபவையாகும்.