ராகுல் காந்திக்கு எதிரான பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூரின் புகார்: உரிமைக் குழுவுக்கு அனுப்ப திட்டம்?

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : படம் ஏஎன்ஐ
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூரை தீவிரவாதி என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியது தொடர்பாக பிரக்யா அளித்த புகார் நாடாளுமன்ற உரிமைக் குழுவுக்கு அனுப்பப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவையில் கடந்த வாரம் பேசிய பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர், காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று பேசினார்.

இதுகுறித்து கருத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிடுகையில், " தீவிரவாதி பிரக்யா, தீவிரவாதி கோட்சேவை தேசபக்தர் என்று அழைக்கிறார். நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் வருத்தமான நாள்" என்று தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி தன்னைத் தீவிரவாதி எனக் கூறியது தொடர்பாக பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் நாடாளுமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் நிருபர்கள் பிரக்யா தாக்கூர் புகார் குறித்துக் கேட்கையில், "நான் ட்விட்டரில் பதிவிட்ட என்னுடைய கருத்தில் தெளிவாக இருக்கிறேன். என் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதை வரவேற்கவும் செய்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் அளித்த புகார் உரிமைக் குழுவுக்கு அனுப்பப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில், "நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தீவிரவாதி என்று எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் அழைப்பது தீவிரமானது. பிரக்யா தாக்கூர் இன்னும் நீதிமன்றத்தால் எந்தவிதமான தண்டனைக்கும் ஆளாகாமல்இருப்பவர். ஆதலால் ராகுல் காந்தி பேசியது உரிமைக் குழுவுக்கு அனுப்பி விவாதிக்க வேண்டியது இருக்கும்" எனத் தெரிவித்தனர்.

ஒருவேளை உரிமைக் குழுவுக்கு இந்தப் புகாரை சபாநாயகர் ஓம் பிர்லா பரிந்துரை செய்தால், ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்படும். அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in