

பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து அகில இந்திய மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் புதுடெல்லியில் இன்று காலை கருப்புத் துணி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில மாணவிகள் கதறி அழுதபடி முழக்கங்களை எழுப்பினர்.
ஹைதராபாத்தில் 25 வயதான கால்நடை பெண் மருத்துவர் கடந்த வாரம் புறநகரில் சிலரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் எரிந்த நிலையில் மறுநாள் கண்டெடுக்கப்பட்டது. அங்குள்ள டோல் பிளாசா அருகே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டியின் பின்புற டயரைப் பழுதாக்கி, பாதிக்கப்பட்டவரை தங்கள் சதிவலைக்குள் நயவஞ்சகமாக சிக்க வைத்தனர். இதில் தொடர்புடைய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதில் குற்றவாளிகளை சைபராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்ட இப்போராட்டத்தை அகில இந்திய மாதர் சங்கத்துடன் இணைந்து அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் முன்னின்று நடத்தியது.
போராட்டத்தின் அமைப்பாளர் அமிர்தா தவான் கூறுகையில், ''நான் இந்தப் போராட்டத்தை ஒரு அரசியல்வாதியாக அல்ல, நமது சமூகத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து அக்கறை கொண்ட சிவில் சமூகத்தின் உறுப்பினராக ஏற்பாடு செய்கிறேன். பெண்கள் எவ்வளவு பாதுகாப்பற்றவர்கள் என்பதைப் பற்றிப் பேச எங்களுக்கு இன்னொரு நிர்பயா ஏன் தேவைப்பட்டது? நீதித்துறை விரைவான நீதியை உறுதி செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஓரளவு ஆறுதல் கிடைக்கும்.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் இன்னும் சிறையில் உள்ளனர். அவர்கள் தூக்கிலிடப்படவில்லை. சிறையில் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உணவு மற்றும் தூக்கத்தைப் பெறுகிறார்கள், ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் என்ன, அவற்றின் வாழ்க்கை என்றென்றும் பாழாகிறது'' என்று தெரிவித்தார்.
மாணவிகள் கதறல்
"பலாத்காரம் செய்தவர்களைத் தூக்கிலிட வேண்டும்", ''கொலையாளிகள் உயிருடன் இருக்கிறார்கள் என்று நாங்கள் வெட்கப்படுகிறோம்'' என்று வாசகங்களைக் கொண்ட அட்டைகளை அவர்கள் ஏந்தியபடி நெற்றியில் கருப்புத் துணிகளைக் கட்டிக்கொண்டு மாணவ, மாணவிகள் கோஷங்களை எழுப்பினர்.
''எங்களுக்கு நீதி வேண்டும்'' என்ற கூக்குரல்கள் ஆர்ப்பாட்டத்தில் வான் வழியாக எதிரொலித்தன. டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியின் மாணவி அதிதி புரோஹித் இந்த கோஷங்களை எழுப்பும்போது கதறி அழுதார்.
''இப்படிப்பட்ட ஒருபோராட்டத்தில் நான் முதல் முறையாகக் கலந்துகொள்கிறேன். ஏன் தெரியுமா? டெல்லியில் வீட்டை விட்டு விலகி இருக்கும் ஒரு பெண்ணைப் போலவே, இந்தப் பிரச்சினை என்னையும் என் குடும்பத்தையும் பாதிக்கிறது'' என்று அதிதி புரோஹித் தெரிவித்தார்.