

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்த குற்றத்தை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என பல்வேறு கட்சி எம்.பி.க்களும் வலியுறுத்தினர்.
ஹைதராபாத்தில் 25 வயதான கால்நடை பெண் மருத்துவர் கடந்த வாரம் புறநகரில் சிலரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் எரிந்தநிலையில் மறுநாள் கண்டெடுக்கப்பட்டது.
அங்குள்ள டோல் பிளாசா அருகே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டியின் பின்புற டயரை பழுதாக்கி பாதிக்கப்பட்டவரை தங்கள் சதிவலைக்குள் நயவஞ்சகமாக சிக்க வைத்தனர். குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. பல்வேறு கட்சி எம்.பி.க்களும் இந்த பிரச்சினையை எழுப்பினர். சமாஜ்வாதிக் கட்சியின் பெண் எம்.பி. ஜெயா பச்சன் பேசுகையில் ‘‘நிர்பயா தொடங்கி எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்டன. ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர் கதையாகி வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது. ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களை அடித்துக் கொல்ல வேண்டும்’’ எனக் கூறினார்.
அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந்த் பேசுகையில் ‘‘நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறது’’ என வேதனைத் தெரிவித்தார்.
மக்களவையிலும் இதுதொடர்பாக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளிக்கையில் ‘‘பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களை ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது’’ எனக் கூறினார்.