பிஎம்சி வங்கி மோசடி: 78% முதலீட்டாளர்கள் பணம் திரும்ப அளிக்கப்பட்டு விட்டது: நிர்மலா சீதாராமன்

பிஎம்சி வங்கி மோசடி: 78% முதலீட்டாளர்கள் பணம் திரும்ப அளிக்கப்பட்டு விட்டது: நிர்மலா சீதாராமன்
Updated on
1 min read

பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்துள்ள முதலீட்டாளர்களில் 78 சதவீதம் பேர் தங்கள் பணம் முழுவதையும் எடுக்க அனுமதிக்கப்பட்டு விட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரிய வந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக வாடிக்கையாளர் 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை பிஎம்சி வங்கி கடன் வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிகமாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடன் வாங்கிய ஹெச்டிஐஎல் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.3,500 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. பிஎம்சி வங்கியின் இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங்கும் கைதாகியுள்ளனர்.

இந்தநிலையில் மக்களவையில் இந்த பிரச்சினை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அவர் கூறியதாவது:
பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்துள்ள முதலீட்டாளர்களில் 78 சதவீதம் பேர் தங்கள் பணம் முழுவதையும் எடுக்க அனுமதிக்கப்பட்டு விட்டது.

வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றிய நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அதனை ஏலத்தில் விட்டு பணம் திரும்பப் பெறப்படும். அந்த பணம் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in