

ஐயப்ப பக்தர்களின் வசதியை கருத்தில்கொண்டு, சபரிமலை (பம்பை) செல்ல ‘புல்லட்' மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு வழங்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம்.
ஏராளமான பக்தர்களின் வருகை காரணமாக சபரிமலை செல்லும் பேருந்துகளிலும், ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழியும். இதனால் பக்தர்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.இந்நிலையில், பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக, வாடகைக்கு ‘ராயல் என்பீல்டு' நிறுவனத்தின் ‘புல்லட்' மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டத்தை தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் பிரிவு அலுவலகம் கடந்த வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து அந்த அலுவலகத்தின் மேலாளர் (வர்த்தகம்) பாலமுரளி கூறியதாவது:
கொச்சியில் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விடும் ‘கபே ரைடர்ஸ்' என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். முதல் கட்டமாக, செங்கானூர் ரயில் நிலையத்தில் ‘புல்லட்' மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதன் தொடர்ச்சியாக, திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர் ரயில் நிலையங்களிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
வாடகை எவ்வளவு?
இந்த மோட்டார் சைக்கிள்கள் நாளொன்றுக்கு (அல்லது 200 கிலோமீட்டருக்கு) ரூ.1,200 என்ற வீதத்தில் வாடகைக்கு விடப்படுகின்றன. குறிப்பிட்ட நேரத்தை தாண்டும்பட்சத்தில், ஒரு மணி நேரத்துக்கு ரூ.100 என்ற வீதத்தில் கூடுதலாக பணம் வசூலிக்கப்படும் என ‘கபே ரைடர்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இத்திட்டத்தில் புல்லட் மோட்டார் சைக்கிள்களை போல ‘ஹார்லி டேவிட்சன்' மோட்டார் சைக்கிள்களும் விரைவில் வாடகை விடப்படவுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.