மகாராஷ்டிராவில் பாஜகவின் செயல்படாத 'மகா போர்டலை' கலையுங்கள்; புதிய வேலைவாய்ப்புத் துறையை உருவாக்குங்கள்: உத்தவ் தாக்கரேவிடம் சுப்ரியா சுலே பரிந்துரை

சுப்ரியா சுலே செய்தியாளர்களிடம் பேசினார். | படம்: ஏஎன்ஐ
சுப்ரியா சுலே செய்தியாளர்களிடம் பேசினார். | படம்: ஏஎன்ஐ
Updated on
1 min read

பாஜகவின் செயல்படாத மகா போர்டலைக் கலைத்துவிட்டு இளைஞர்களுக்கு உண்மையிலேயே வேலைவாய்ப்புகளை வழங்கும் விதமான புதிய அரசுத்துறையை உருவாக்கும்படி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் சுப்ரியா சுலே இன்று கோரிக்கை வைத்தார்.

நவம்பர் மாதம் 28-ம் தேதி (சனிக்கிழமை அன்று) மகாராஷ்டிர மாநிலத்தின் 18-வது முதல்வராக சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணியின் சார்பில் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரேவை தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே எம்.பி. இன்று சந்தித்துப் பேசினார்.

சந்திப்பு முடிந்த பிறகு சுப்ரியா சுலே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைப்பதற்காக இன்று நான் அவரைச் சந்தித்தேன். ஒன்று, முன்னாள் பாஜக அரசு ஏற்படுத்திச் செயல்படாமல் உள்ள 'மகா போர்டலை' கலைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து இளைஞர்களுக்கு உண்மையிலேயே வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையிலான சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு போர்டலை அரசுத்துறையாக ஏற்படுத்த வேண்டும்.

அடுத்து இரண்டாவதாக, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் நேரடியாகச் சென்றடையும் வகையில் அவர்களுக்காக தனியாக ஒரு அமைச்சகம் அமைக்க வேண்டும்.

இந்த இரு கோரிக்கைகளை நான் புதிய முதல்வரிடம் வழங்கியுள்ளேன்''.

இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.

முன்னதாக, இன்று காலை தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்தார். ஆரே காலனி குடியிருப்புப் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த மெட்ரோ ரயில் ஷெட் பணியை, கோரேகான் ஆர்பிஎப் அணிவகுப்பு மைதானத்தில் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in