Published : 01 Dec 2019 06:40 PM
Last Updated : 01 Dec 2019 06:40 PM

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: நாளை முதல் ராகுல் காந்தி பிரச்சாரம்

ஜார்க்கண்ட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நாளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்று பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

ஐந்து கட்ட வாக்குப்பதிவின் முதல் கட்டத் தேர்தல் நேற்று நடைபெற்றது. மீதமுள்ள நான்கு கட்டத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட, ராகுல் காந்தி நாளை ஜார்க்கண்ட் வருகிறார். அங்கு நாளை மதியம் 1.30 மணிக்கு சிம்டேகாவில் கல்லூரி சாலையில் உள்ள பஸார்டண்ட் மைதானத்தில் நடைபெறும் பேரணியில் அவர் பேசுகிறார்.

நான்கு கட்டங்களாக நடைபெறும் தேர்தலுக்காக ஒவ்வொரு கட்டத் தொகுதிகளுக்காகவும் தலா ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 7, 12, 16 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வெவ்வேறு முக்கிய நகரங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடுவார் என கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்களில் செய்த தவறை மீண்டும் செய்ய விரும்பவில்லை என்பதால், அதன் மந்தமான அணுகுமுறையை மாற்றிக்கொள்ள முடிவெடுத்தது. அதன்படி ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அடங்கிய 40 நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) உடன் இணைந்து காங்கிரஸ் தேர்தலைச் சந்திக்கிறது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 81 இடங்களில் காங்கிரஸ் 31 இடங்களில் போட்டியிடுகிறது. ஜே.எம்.எம் 43 மற்றும் ஆர்.ஜே.டி மற்ற ஏழு இடங்களிலும் போட்டியிடுகிறது.

ஜே.எம்.எம் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்.

ஆளும் பாஜக அதன் முக்கியப் பிரச்சாரகரான பிரதமர் நரேந்திர மோடி மூலம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா மற்றும் பல மூத்த பாஜக தலைவர்களும் மாநிலத்தின் பேரணிகளில் உரையாற்றியுள்ளனர்.

2014 சட்டப்பேரவைத் தேர்தலில், ஜே.எம்.எம், காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகியவை கூட்டணி அமைத்திருந்தன. இருப்பினும், இந்த முறை ஜே.வி.எம். இக்கூட்டணியிலிருந்து விலகிச்சென்றுவிட்டது. இந்த முறை காங்கிரஸ் - ஜே.எம்.எம் ஆகிய கட்சிகள் ஆர்.ஜே.டி உடன் இணைந்துள்ளன.

2014 சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 37 இடங்களையும், அதன் கூட்டணியான ஆல் ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ) ஐந்து இடங்களையும், ஜே.எம்.எம் 19 இடங்களையும், காங்கிரஸ் ஆறு இடங்களையும், ஜே.வி.எம் எட்டு இடங்களையும் வென்றது. மீதமுள்ள ஆறு இடங்களை மற்ற கட்சிகள் வென்றன. பாஜகவும், ஏ.ஜே.எஸ்.யுவும் இந்த முறை தனித்தனியாகப் போட்டியிடுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x