Last Updated : 01 Dec, 2019 12:37 PM

 

Published : 01 Dec 2019 12:37 PM
Last Updated : 01 Dec 2019 12:37 PM

அயோத்தி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு மோதலையும் பிரிவினையையும் ஏற்படுத்தும்: மத்திய அமைச்சர் நக்வி கண்டனம்

அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம், ஜாமியத் உலேமா இ ஹிந்த் அமைப்புகள் மேல் முறையீடு செய்துள்ள முடிவு சமூகத்தில் பிரிவினையையும், மோதலையும் உருவாக்கும் என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, ராமஜென்மபூமி நில விவகாரத்தில் 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்கள் மசூதி கட்டவும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜாமியத் உலேமா இ ஹிந்து அமைப்பினர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வரும் 4-ம் தேதிக்குள் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் வரும் 9-ம் தேதிக்குள் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

''அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், அதை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்வதால், சமூகத்தில் பிரிவினையும், மோதலும் தேவையில்லாமல் உருவாகும்.

முஸ்லிம்களுக்கு முக்கியமானது பாபர் மசூதி அல்ல, சமத்துவம்தான். கல்வி, பொருளாதாரம், சமூகத்தில் உயர்ந்த இடத்துக்குக் கொண்டுவருதல் ஆகியவற்றில் சமத்துவம் முக்கியம்.

ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துகளைக் கூறவும், நீதிமன்றத்தை அணுகவும் உரிமை இருக்கிறது. ஆனால், நான் சொல்வதெல்லாம், நூற்றாண்டுகாலமாக சிக்கலில் இருந்த பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் அனைவரும் அனைவரும் ஏற்கும் வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் ஏற்கிறார்கள், மதிக்கிறார்கள். ஆனால், இந்தத் தீர்ப்புக்குப் பின் ஒற்றுமை பலமாகி இருக்கிறது என்ற உண்மையை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இதனால்தான் சீராய்வு மனு என்ற பெயரில் சமூகத்தில் பிரிவினையையும், மோதலையும் உருவாக்க முயல்கிறார்கள். இது சமூகத்தால் ஏற்கப்படாது.

தனிப்பட்ட சிலரின் குரல்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த குரலாகாது. அனைத்துத் தரப்பினரின் உணர்வுகளும் நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டுள்ளது. அதை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும்.

சீராய்வு மனுத் தாக்கல் செய்யும் முடிவில் இருப்பவர்கள் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த வாய்ப்பான சமரசம் மூலம் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கலாமே.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்து தரப்பினரும், முஸ்லிம் தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். என்னுடைய வீட்டில் நடந்த கூட்டத்தில் அனைத்து பிரதிநிதிகளும் பங்கேற்றார்கள். அப்போது, நீதிமன்றத்தில் இருந்து எந்தத் தீர்ப்பு வந்தாலும் ஏற்போம் என்று ஒருமித்த குரலில்தான் பேசினார்கள்.

சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போகிறோம் என்று கூறுபவர்கள் தொடக்கத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொண்டார்கள், வரவேற்றார்கள். ஆனால், என்ன காரணமோ எனக்குத் தெரியவில்லை, என்ன மாற்றம் நடந்ததோ அவர்கள் தற்போது எதிரான நிலையை எடுத்துள்ளார்கள்''.

இவ்வாறு முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x