

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்பாக வடகிழக்கு மாநிலங் களின் முதல்வர்கள், கட்சித் தலை வர்கள் உள்ளிட்டோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சியர்கள், பவுத்தர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க 1955-ம் ஆண்டின் குடியுரிமை சட்டம் வழிவகை செய்கிறது. அதாவது, மேற்குறிப்பிட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 11 ஆண்டுகள் வசித்து வந்தால் அவர் களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இதனிடையே, இச்சட்டத்தில் உள்ள 11 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக மாற்றி சட்டத்திருத்த மசோதா ஒன்றினை மத்திய அரசு கொண்டு வந்தது. எனினும், இந்த மசோதா காலாவதியானதை தொடர்ந்து, நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் இதனை நிறை வேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது.
இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனவே, இந்த விவகாரம் குறித்து வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அசாம் முதல்வர் சர்வானந்த சோனோவால், அரு ணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா ஆகியோர் பங்கேற்றனர். - பிடிஐ