

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று நடந்த முதல்கட்ட வாக்குபதிவு நடந்த முடிந்த நிலையில் 62.37சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள13 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது.
இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளும் வேட்பாளர்களைக் களத்தில் இறக்கியுள்ளன. ஐக்கிய ஜனதா தளம், இடது சாரிகள், பாபுலால் மாரண்டியின் ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சிகளும் களத்தில் உள்ளன.
ஜார்க்கண்டில் உள்ள சதாரா, கும்லா, பிஷுன்பூர், லோஹர்தாகா, மணிகா, ரேட்கர், பங்கி, தால்தோகாஞ்ச், பிஷ்ரம்பூர், சதார்பூர், ஹூசைன்பாத், கார்வா, பவாந்த்பூர் ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 13 தொகுதிகளில் 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இதில் 15 பேர் பெண் வேட்பாளர்கள்.
அதிகபட்சமாக பவாந்த்பூரில் 28 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக சதாராவில் 9 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இன்று தேர்தல் நடந்த பகுதிகள் நக்சலைட் தாக்குதல் அதிகஅளவில் நடக்கும் பகுதி என்பதால் மாலை 3 மணியுட் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. முதல்கட்டத் தேர்தலில் 62.37சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
முன்னதாக 13 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கும் சூழலில் கும்ரா தொகுதிக்கு உட்பட்ட காக்ரா-காத்கோத்வா நகரங்களுக்கு இடையே விஷ்னுபூர் எனும் இடத்தில் உள்ள தரைப்பாலத்தை நக்சலைட்டுகள் இன்று வெடிகுண்டு மூலம் தகர்த்தனர். இதில் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.