

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இதற்காகவும், ஒரு அறக்கட்டளை அமைக்க வலியுறுத்தி உபியின் ஷியா பிரிவு முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான அமார் ரிஜ்வீ, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உபியில் அதிகமாக வாழும் ஷியாக்கள், முஸ்லிம்களின் முக்கியப் பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறார்கள். மதக்கொள்கையின் அடிப்படையில் இப்பிரிவினர் இருவரும் தம்மை ஒன்றாகக் கருதுவதில்லை.
பல நூற்றாண்டுகளாக சன்னி பிரிவினர் மசூதிகளில் தொழுவதைத் தவிர்ப்பதும் வழக்கம். இவர்களுக்காக எனத் தனியான உள்ள மசூதிகளில் சன்னி முஸ்லிம்களும் தொழுவதைத் தவிர்த்தனர். இத்துடன், இருபிரிவினர் இடையே பல்வேறு காரணங்களால் வகுப்பு மோதல்களும் உ.பி.யில் ஏற்பட்டு வந்தது.
இருப்பினும், அயோத்தி வழக்கில் அதன் சில முக்கியத் தலைவர்கள் தவிர பெரும்பாலான ஷியாக்கள், சன்னி முஸ்லிம்களுக்கு ஆதரவளித்து வந்தனர். இவ்விரு பிரிவினருக்கு இடையே ஓரிரு ஆண்டுகளுக்கு முன் முற்போக்கான மாற்றம் ஏற்படத் துவங்கியது.
அதில், இருவரும் இணைந்து உ.பி.யின் சில மசூதிகளில் தொழுகை நடத்த தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் அயோத்தியில் அரசு அளிக்க உள்ள 5 ஏக்கர் நிலத்திற்கு ஷியா பிரிவினரும் குறி வைத்து, சொந்தம் கொண்டாட முயல்வதாகக் கருதப்படுகிறது
இது குறித்து அகில இந்திய ஜனநாயக சிறுபான்மை அமைப்பின் தலைவரான அமார் ரிஜ்வீ பிரதமருக்கு அனுப்பியக் கடிதத்தில் எழுதியிருப்பதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்பு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், இதன் மீது மேல்முறையீடு செய்யாமல் இருக்கும் முஸ்லிம்கள் பாராட்டுக்குரியவர்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கோயில் கட்ட நிறுவுவதை போல் மசூதி கட்டவும் ஒரு அறக்கட்டளையை அரசு அமைக்க வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில் அந்த மசூதி தம் தரப்பிற்கு உரியது என முஸ்லிம்கள் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகும்.
இதனால், அந்த அனைத்து முஸ்லிம்களுக்கும் பயன்படுவதுடன் புதிதாக எந்த பிரச்சனைகளும் உருவாகாமல் தவிர்க்க முடியும். அரசு அளிக்கும் 5 ஏக்கர் நிலத்தில் மசூதியுடன் சேர்த்து ஒரு பல்கலைகழகம் மற்றும் மருத்துவமனையும் கட்டப்பட வேண்டும்.
இதன்மூலம், அந்த நிலம் பொதுமக்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்த முடியும். இந்த மூன்றையும் முஸ்லிம்களின் அறக்கட்டளை நிர்வகித்து வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஷியா பிரிவு முக்கிய முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான அமார் ரிஜ்வீ, கடந்த அக்டோபர் 23 இல் பாஜகவில் இணைந்துள்ளார். இதற்கு முன் அவர் உ.பி. மாநில காங்கிரஸின் முக்கிய முஸ்லிம் தலைவராக இருந்தார்.