

மகாராஷ்டிரா முதல்வராக நேற்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்ட உத்தவ் தாகரே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரபல பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கரை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு சில தினங்களுக்கு முன்பு (நவ.11) மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து மும்பை ப்ரீச் காண்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
லதா மங்கேஷ்கருக்கு இன்டென்ஸிவிஸ்ட் எனப்படும் தீவிர சிகிச்சை நிபுணரான ஃபரூக் இ உத்வாடியா சிகிச்சை அளித்து வந்தார். நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவரது நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இந்தநிலையில் அவரது உடல்நிலை தேறியது. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் முழுமையாக குணமடைய மேலும் சில நாட்கள் ஆகலாம் என்பதால் கண்காணிப்பிலேயே வைத்திருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரபல பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கரை முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் சென்று நலம் விசாரித்தார்.
லதா மங்கேஷ்கர் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் 30,000-க்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 2001-ல் அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.