Published : 30 Nov 2019 11:40 AM
Last Updated : 30 Nov 2019 11:40 AM

சமூகத்தின் மீதான வேரூன்றிய சந்தேகக் கண்ணோட்டத்தை கைவிடுங்கள் மோடி: கவலையுடன் மன்மோகன் சிங் அறிவுரை

இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலைமையை “ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறிய முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங், பிரதமர் மோடி சமூகத்தையே சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார், அந்தப் போக்கை கைவிட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

பொருளாதாரம் குறித்த தேசிய கலந்தாய்வு கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று தலைமை உரையாற்றிய மன்மோகன் சிங் கூறியதாவது:

“மோடி அரசு அனைத்தையும், ஒவ்வொருவரையும் சந்தேகம், நம்பிக்கையின்மை என்ற கறைபடிந்த முப்பட்டைக் கண்ணாடி வழியாக நோக்குகிறது. சந்தேக நோய் பீடித்த இந்த முப்பட்டைக் கண்ணாடி மூலம் பார்ப்பதால்தான் முந்தைய அரசின் அனைத்துக் கொள்கைகளையும் ஏதோ மோசமான நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது. இதனால்தான் ஒவ்வொரு கடன் வழங்கலையும் தகுதியற்றதாகவும், ஒவ்வொரு தொழிற்துறை திட்டமும் தொழிலதிபர்களுக்கு லாபம் ஈட்டித் தர செய்யும் முயற்சியாகவும் இந்த அரசு முந்தைய அரசின் திட்டங்களைப் பார்த்து வருகிறது.

எனவேதான் மோடி அரசு ஏதோ நாட்டைக் காப்பாற்ற வந்த காப்பான் போல் செயல்படுகிறது, ஒழுக்கவாத போலீஸ் கண்காணிப்பு முறைகளான பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது, ஆனால் அது சீரழிவுக்குத்தான் இட்டுச் சென்றது. பொருளாதார வளர்ச்சி மீட்டெடுக்கப்பட வேண்டுமெனில் அரசு நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதோடு தன் மீதான மக்களின் நம்பிக்கையையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. தொழிலதிபர்கள், மூலதனம் இடுவோர், ஊழியர்கள், தொழிலாளர்கள் நம்பிக்கையுடனும் பூரிப்புடனும் உணர்வது போக பயத்துடனும் பதற்றத்துடனுமே செயல்பட வேண்டியிருக்கிறது.

பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்து விட்டால் மட்டும் பொருளாதாரத்தை மீட்டெடுத்து விட முடியுமா? நம் சமூகத்தில் தற்போதைய நிலையான பயம் மற்றும் நம்பிக்கையின்மை களையப்பட்டு நம்பிக்கை மலர்ந்தால்தான் பொருளாதாரம் மீண்டும் பெரு வளர்ச்சி காண முடியும்.

இதை விடுத்து வண்ணமய தலைப்புச் செய்திகள், ஆட்சிப் பற்றிய சப்தங்கள் மேவும் ஊடக வர்ணனைகளால் எந்தப் பயனும் இல்லை. பொருளாதார ஆய்வறிக்கைகள், தரவுகளை மறைப்பது சிறுபிள்ளைத்தனம் என்பதோடு பொருளாதாரத்திற்கு எந்த விதப் பயனையும் அளிக்கப்போவதில்லை.

நம் சமூகத்தின் மீதான வேரூன்றிய சந்தேகக் கண்ணோட்டத்தை பிரதமர் மோடி கைவிட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். பரஸ்பர நம்பிக்கை மேலோங்கும் ஒத்திசைவான சமூகத்திற்கு நம்மை மீண்டும் இட்டுச் செல்ல வேண்டும்.

ஆனால் இன்றைய தினத்தில் நம் சமூகத்தின் நிலைமை கவலையளிப்பதாக உள்ளது, சமூகத்தின் இந்த நிலைமைதான் பொருளாதார மந்த நிலைக்கும் காரணம். நான் இதனை நாட்டின் கவலையுள்ள குடிமகனாகவும் பொருளாதார வாதியாகவும் குறிப்பிடுகிறேன். தேசத்தின் பொருளாதார நிலைமை அதன் சமூக நிலைமையை பிரதிபலிப்பதாகும். எனவே இந்த விவாதத்தில் நாம் அரசியலை கொஞ்சம் தள்ளி வைப்போம்.

மக்களுக்கிடையேயான சமூக ஊடாட்டங்கள், பல்வேறு தரப்பட்ட பரிமாற்றங்கள் ஆகியவற்றின் செயல்வடிவமாக இருப்பது பொருளாதாரம். பரஸ்பர நம்பிக்கை, தன்னம்பிக்கை ஆகியவைதான் பொருளாதார வளர்ச்சியை ஊட்டி வளர்க்கும் சமூக பரிமாற்றங்களாகும். நம் சமூகத்தை நெய்து உருவாக்கும் கூறுகள் தற்போது கிழிக்கப்பட்டுள்ளன.

நம் சமூகத்தில் பயம்தான் தற்போது பிரதானமாக இருந்து வருகிறது. என்னிடம் பேசிய பல தொழிலதிபர்கள் தாங்கள் அரசு அதிகாரிகளால் துன்புறுத்தப்படும் அச்சத்தில் வாழ்வதாக கூறுகின்றனர். அரசின் நடவடிக்கைக்கு அஞ்சி வங்கியாளர்கள் புதிய கடன் கொடுக்க அஞ்சுகின்றனர். தொழில் முனைவோர்கள் பணத்தை முதலீடு செய்ய அச்சப்படுகின்றனர்.

அரசின் கொள்கை வகுப்போர்கள் மற்றும் பிற ஸ்தாபனங்கள் உண்மையைப் பேச அஞ்சுகின்றனர். அறிவார்த்த நேர்மையுடன் கூடிய கொள்கை விவாதங்களை முன்னெடுக்கத் தயங்குகின்றனர். ஆழமான நம்பிக்கையின்மை, சந்தேகம், அச்சம் எதுவும் சாத்தியமில்லை என்ற ஆழமான அவநம்பிக்கை போன்ற நச்சுச் சேர்க்கைகள் பொருளாதார நடவடிக்கைகளை முடக்குவதால் பொருளாதார வளர்ச்சி முடங்குகிறது” என்றார் மன்மோகன் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x