

கர்நாடக சட்டப்பேரவையில் காலியாக உள்ள 15 இடங்களுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மண்டியாவில் உள்ள கே.ஆர்.பேட்டையில் மஜத வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் குமாரசாமி அண்மையில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும்போது, “மண்டியா மக்கள் என் மக்கள் என்று நம்பித்தான் இங்கு எனது மகனை தேர்தலில் போட்டியிட வைத்தேன். ஆனால் நீங்கள் என்னை கைவிட்டுவிட்டீர்கள். எனது மகன் தோற்றதை நினைத்து நான் அதிகம் வருத்தப்படவில்லை. எனது மக்களே என்னை கைவிட்டு விட்டார்களே என்று நினைத்துதான் அதிகம் வருந்தினேன்.
சொந்த ஊரில் தோற்றபின், அரசியலில் எனக்கு ஏதாவது மான மரியாதை இருக்குமா? எதற்காக நான் அரசியலில் இருக்க வேண்டும்? தினமும் சாப்பிடும் 2 வேளை சோற்றுக்காக நான் அரசியல் செய்ய வேண்டுமா? யாரை நம்பி நான் அரசியல் செய்வது? தன்மானத்தை இழந்து அரசியல் செய்ய வேண்டுமா? மண்டியா மக்களே என்னை ஏன் கைவிட்டீர்கள்?” என கேட்டு மேடையில் கண்ணீர் விட்டு அழுதார்.
பிறகு கண்ணீரை துடைத்துக் கொண்ட குமாரசாமி, “எனக்கு 2 முறை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்த நிலையுடன் கடந்த ஒரு வாரமாக கர்நாடகா முழக்க பிரச்சாரம் செய்கிறேன். உங்களைப் போன்ற ஏழை மக்களுக்காகத் தானே நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன். என்னை கைவிட்டது நியாயமா?” என தழு தழுத்த குரலில் குமாரசாமி கேட்க, கூட்டத்தில் இருந்தவர்கள், “நாங்க இருக்கிறோம், அண்ணா அழாதீங்க” என்று குரல் எழுப்பினர்.