

மக்களவை தேர்தல் வெற்றிக்குப் பின்னர் முதல் முறையாக தலைநகர் டெல்லி வந்த நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மோடி வருகையையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றியடைந்துள்ள நிலையில், அமைச்சரையில் இடம்பெறப் போகும் தலைவர்கள் குறித்த முக்கிய ஆலோசனை இன்று டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் பதவியை ஏற்கவுள்ள நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் ராஜ் நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிலையில் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நரேந்திர மோடி டெல்லி புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்திலிருந்து அசோகா சாலையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு மோடி செல்லும் வழி எங்கும் பாஜக தொண்டர்கள் திரண்டனர். நகரெங்கும், மோடியை வரவேற்க மக்கள் திரளாக வந்தடைந்தனர்.
அவர் செல்லும் வழிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லி விமான நிலையத்திலிருந்து அசோகா சாலை வரை மேள தாளங்களுடன், மோடி கோஷ மழையுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தனது காரிலிருந்து வெளியே மக்களை நோக்கி மக்களுக்கு நன்றி தெரிவித்த மோடி, பாஜக அலுவலகம் செல்லும் முன் மக்களிடையே பேசினார். அப்போது அவர்," இந்த வெற்றி, என்னுடைய வெற்றி அல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் வெற்றி தான். பாஜகவின் இந்த வெற்றிக்காக கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். அவர்களது உழைப்புக்குக் கிடைத்த பரிசே இந்த வெற்றி. இந்த வெற்றி இந்திய மக்களின் வெற்றி" என்றார்.
நரேந்திர மோடியுடன் இந்த ஊர்வலத்தில் ராஜ்நாத் சிங், ரவி சங்கர் பிரசாத், நிதின் கட்கரி உள்ளிட்டோர் இருந்தனர். பேரணி பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் டெல்லி போலீசார் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.