Published : 30 Nov 2019 08:04 AM
Last Updated : 30 Nov 2019 08:04 AM

தெலங்கானாவில் பெண் மருத்துவர் கொலையில் 4 பேர் கைது: மோட்டார் சைக்கிள் டயரை ‘பஞ்சர்’ செய்து உதவுவது போல நடித்து ஏமாற்றியதாக வாக்குமூலம் 

தெலங்கானாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கடத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (26). ஹைதராபாத் மாதப்பூர் கால்நடை அரசு மருத்துவ மனையில் மருத்துவராக பணி யாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை வழக்கம்போல் பணிக்கு சென்ற பிரியங்கா, இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, வழியில் அவரது இருசக்கர வாகனத்தின் டயர் ‘பஞ்சர்' ஆகியுள்ளது. இதையடுத்து, தனது தங்கையை செல்போனில் தொடர்பு கொண்டு பிரியங்கா பேசியிருக் கிறார். அப்போது அவர், தனக்கு உதவி செய்ய சில லாரி டிரைவர்கள் வந்துள்ளனர் என்றும், அவர்களை பார்க்க பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, வாடகை காரை பிடித்து வீட்டுக்கு வருமாறு பிரியங்காவிடம் அவரது தங்கை கூறியுள்ளார். ஆனால், இரவு வெகுநேரமாகியும் பிரியங்கா வீடு திரும்பவில்லை. அவரது செல் போனும் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.

இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர், இரவு 11 மணியள வில் மாதப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, ரங்காரெட்டி மாவட்டம் சட்டான்பல்லி பாலத்துக்கு கீழே, எரிந்த நிலையில் பிரியங்கா சடலமாக கிடந்துள்ளார். இதை யடுத்து, அங்கு சென்ற போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றினர். பின்னர், இதுகுறித்து அவரது பெற் றோருக்கும் தகவல் அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இச்சம்ப வத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. இதனைத் தொடர்ந்து, இருசக்கர வாகனம் பஞ்சர் ஆகி விட்டதாக பிரியங்கா தனது தங்கை யிடம் கூறிய இடத்துக்கு சென்ற போலீஸார், அங்கு பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த னர். அப்போது, லாரி எண்களை அடிப்படையாக கொண்டு முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள்தான் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

விசாரணையில், பிரியங்காவின் ஸ்கூட்டரை நால்வரும் பஞ்சர் செய்த தும், பின்னர், உதவுவது போல நடித்து அவரை வேறு இடத்துக்கு கொண்டுசென்று பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், அடையாளம் தெரியா மல் இருப்பதற்காக, பிரியங்காவின் உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாக போலீஸாரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பெண்கள் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கை

இரவில் தனியாக செல்லும் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கை குறித்து சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் ஆர்.சுதாகர் கூறியதாவது:

ஆண்கள் மட்டும் அல்லாமல் பெண்களும் எந்த நேரமும் தனியாக செல்லலாம். அதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை காவல்துறை அளித்துள்ளது.

ஏதேனும் ஆபத்துக்கு உள்ளாகும் பெண்கள் உடனடியாக இலவச தொலைபேசி எண் 100-ஐ அழைத்தாலே போதுமானது. அடுத்த சில நிமிடங்களில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உதவுவார்கள்.மேலும், பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் வகையில் காவலன் (Kavalan SOS app) செயலியை அறிமுகம் செய்துள்ளோம். இந்த செயலியை தங்கள் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

அவசரத்தில் அழைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள பொத்தானை ஒரு முறை தொட்டாலே அழைப்பவரின் இருப்பிடம் ஜிபிஎஸ் மூலம் போலீஸார் அறிந்து கொள்வார்கள். மேலும் அழைத்தவரின் செல்போன் கேமரா தானாகவே 15 வினாடிகளில் ஒலி-ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவிடும். 24 மணி நேரமும் இந்த செயலி மூலம் போலீஸாரை தொடர்பு கொள்ள முடியும்.

ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட எந்த வாகனத்தில் சென்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் வாகனத்தின் பதிவு எண்ணை குறித்து வைத்துக் கொள்ளலாம். பெற்றோர், உறவினர்களுக்கு அதை பகிர்ந்து கொள்வதும் நல்லது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x