

ஹைதராபாத்தில் பணிமுடிந்து வீடு திரும்பியபோது பெண் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தெலங்கானா உள்துறை அமைச்சர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா உள்துறை அமைச்சர் முமது மஹமூது அலி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் நடந்த சம்பவத்துக்காக மிகவும் வருந்துகிறோம். காவல்துறை கண்காணிப்புடனேயே செயல்படுகிறது. குற்றங்களைக் கட்டுப்படுத்திவருகிறது. ஆனால், குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண் நன்கு படித்தவராக இருந்தும் பிரச்சினையின்போது 100-ஐ (காவல் கட்டுப்பாட்டு அறை எண்) தொடர்பு கொள்ளாமல் சகோதரியை அழைத்திருக்கிறார்.
தன்னை சந்தேக நபர்கள் சூழ்ந்திருப்பதை அறிந்ததும் அவர் ஏன் 100-ஐ தொடர்பு கொள்ளவில்லை. அவர்மட்டும் 100-ஐ அழைத்திருந்தால் காப்பாற்றப்பட்டிருப்பார். 100 நேசமிகு எண்ணே. அது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தெலங்கானா போலீஸார் நாட்டிலேயே திறம்வாய்ந்தவர்கள் என்பதால் நிச்சயமாக வெகு விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவார்கள்" என்றார்.
அவரின் இந்த கருத்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. ஓர் இளம் பெண் பணி முடிந்து வீடு திரும்புவதற்குள் குற்றம் நடக்கிற நிலையில் அது பற்றி பேசாமல் பாதிக்கப்பட்ட பெண் ஏன் காவல்துறையை அழைக்கவில்லை என வினவுவது பொறுப்பற்ற செயல் என சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர். அவரது கருத்துக்கு கண்டனமும் எழுந்து வருகிறது.
நடந்தது என்ன?
புதன்கிழமை இரவு, விலங்குகள் நல மருத்துவரான பிரியங்காரெட்டி (27) வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் அவரது இருசக்கர வண்டி பஞ்சர் ஆகியுள்ளது. அதனை சரிசெய்ய முயன்று அவர் தவித்துக்கொண்டிருந்தபோது, அப்போது உதவுவதாக கூறி அழைத்துச் சென்றவர்களால் பிரியங்கா வஞ்சமாக ஏமாற்றப்பட்டு பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் அவர் எரித்துக்கொல்லப்பட்டார்.
இரவு 9.22க்கு தொலைபேசியில் அழைத்த பிரியங்காவை மீண்டும் பெற்றோர் அழைத்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடியில் பிரியங்கா தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்த இடத்திலிருந்து 25 கிமீ தூரத்தில் பிரியங்கா உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பிரியங்கா ரெட்டி கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.