

மணிமகுடத்தின் விலைமதிப்பில்லாத கல் போன்று சென்னை ஐசிஎப் தொழிற்சாலை இருக்கிறது, அதை மூடும் பேச்சுக்கே இடமில்லை என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, சென்னை ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையை மூடும் திட்டம் இருக்கிறதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் பதில் அளித்துப் பேசுகையில், " சென்னை ஐசிஎப் ரயில், ரயில் பெட்டி தொழிற்சாலையின் சாதனைகளை நினைத்து அரசு பெருமை கொள்கிறது. இந்தியாவில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தயாரித்தது சென்னை ஐசிஎப் தொழிற்சாலை.
அந்த தொழிற்சாலையை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அது மணிமகுடத்தில் உள்ள விலை மதிக்க முடியாத கல். நம்முடைய ஒவ்வொரு முயற்சியும் ஐசிஎப் தொழிற்சாலையை வளர்க்கும் விதத்திலும், அதை விரிவுபடுத்தும் விதத்திலும், நவீனமாக்கும் விதத்திலும் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்
புல்லட் ரயில் குறித்த மற்றொரு துணைக் கேள்விக்கு அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளிக்கையில், "புல்லட் ரயில்கள் பரிசீலனையில் இருக்கின்றன. முடிவு எடுக்கப்பட்டபின் சரியான நேரத்தில் அவையில் தெரிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
ரயில் விபத்துக்கள் குறித்து அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், " ரயில்வே வரலாற்றிலேயே கடந்த இரண்டரை ஆண்டுகள்தான் மிகவும் பாதுகாப்பான ஆண்டாக இருந்திருக்கும். கடந்த 2 ஆண்டுகளில் ரயில்வே விபத்துக்கள் பெருமளவு குறைந்துவிட்டன.
இஸ்ரோவுடன் இணைந்து ஆர்டிஐஎஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டபின்னர், ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் ரயில் எந்த இடத்தில் வருகிறது, வேகம் எவ்வளவு என்பதைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும். எந்தவிதமான மனித உழைப்பும் இன்றி கண்காணிக்க முடியும். இதன் மூலம் ரயில்களின் வேகம்,விபத்து நடப்பது, உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆடிஐஎஸ் , தேசிய ரயில் பயணிகள் விசாரணை மையத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் பயணிகள் ரயில் எத்தனை மணிக்கு ரயில்கள் ரயில் நிலையத்துக்கு வரும் எனத் தெரிந்து கொள்ள முடியும் " எனத் தெரிவித்தார்