கோட்ஸே குறித்த பேச்சு: 2-ம் முறையாக மன்னிப்புக் கோரினார் பிரக்யா தாக்கூர்

கோட்ஸே குறித்த பேச்சு: 2-ம் முறையாக மன்னிப்புக் கோரினார் பிரக்யா தாக்கூர்
Updated on
1 min read

கோட்ஸே குறித்த பேச்சுக்காக மக்களவையில் இன்று 2-ம் முறையாக போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் மன்னிப்பு கோரினார்.

மக்களவையில் நேற்று எஸ்பிஜி திருத்த மசோதா தொடர்பாக விவாதம் நடந்தது. அதில் இடைமறித்துப் பேசிய போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் "தேசபக்தர் என்ற வார்த்தைக்கு எல்லாம் நீங்கள் உதாரணம் அளிக்க முடியாது. கோட்சே ஒரு தேசபக்தர்" என்று பேசினார்.

இதற்கு அவையில் இருந்த காங்கி்ரஸ் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், பிரக்யா தாக்கூரின் வார்த்தைகள் சபைக்குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா ‘‘மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சைவை தேசபக்தர் என்று மக்களவையில் பிரக்யா தாக்கூர் பேசியது கண்டனத்துக்குரியது.

சமீபத்தில் அவர் நாடாளுமன்றப் பாதுகாப்புக் குழுவில் இடம் பெற்றார். அந்தக் குழுவில் இருந்து அவரை நீக்கப் பரிந்துரை செய்யப்படும்’’எனத் தெரிவித்தார்.

பிரக்யா தாக்கூர் மீது நடவடிக்கை எடுக்க்கோரி எதிர்க்கட்சிகள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இந்தநிலையில் மக்களவையில் இன்று பிரக்யா தனது பேச்சு குறித்து விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:

‘‘நான் பேசியதை திரித்துக் கூறுகின்றனர். இதில் எந்த உண்மையும் இல்லை. எனது பேச்சு யாரையாவது வருத்தமடையச் செய்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். தேசத்துக்காக மகாத்மா காந்தி அளித்த பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.

இந்த அவையில் சில உறுப்பினர்கள் என்னை தீவிரவாதி போல சித்திரிக்கின்றனர். என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று நீதிமன்றம் விடுவித்த பிறகும் எனக்கு இழுக்கு ஏற்படும் வகையில் சிலர் பேசி வருவது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.’’ எனக் கூறினார்.

எனினும் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரியதை ஏற்காமல் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் ஓம் பிர்லா இடைவெளியின்போது அனைக்கட்சி தலைவர்களை அழைத்து இந்த பிரச்சினை குறித்து விவாதித்தார். அப்போது பிரக்யா தாக்கூர் தம்மீதான புகாரை திசை திருப்பவே பார்க்கிறார், அவர் முழுமையான மன்னிப்பு கேட்கவில்லை எனக் கூறினர்.

இதையடுத்து அவை பிற்பகலில் கூடியபோது, கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்பேரின் பிரக்யா மீண்டும் மன்னிப்பு கோரினார். அப்போது ‘‘கோட்ஸேயை நான் தேசபக்தர் என்று கூறவில்லை. அவரது பெயரையே நான் உச்சரிக்கவில்ல. நான் கூறியது யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in