

''பெண் எம்.பியை தீவிரவாதி எனக்கூறுவது காந்தியைக் கொன்றதைவிட மோசமானது; ராகுல் மீது உரிமை நடவடிக்கை வேண்டும் என பாஜக எம்.பி.நிஷாகந்த் துபே இன்று நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல எம்.பி. பிரக்யா தாகூர் நேற்றும் ஒரு சர்ச்சையில் சிக்கினார். நேற்று மக்களவையில் எஸ்பிஜி திருத்த மசோதா தொடர்பாக விவாதம் நடந்தபோது தேவையில்லாமல் ஒரு கருத்தைக் கூறி மாட்டிக்கொண்டார். இதனால் இன்று அவர் நாடாளுமன்ற அவையில் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு ஆளானார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரக்யா கூறுகையில், ''காந்தியைப் பற்றிய எனது கருத்து திரிக்கப்பட்டு முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தன்னைக் குறிவைத்து 'தீவிரவாதி' என்று சொல்லைப் பயன்படுத்தி தாக்கியுளார். எவ்வகையிலும் நான் குற்றவாளி அல்ல. ஒரு பெண், ஒரு எம்பியை பார்த்து பயங்கரவாதி என்று காங்கிரஸ் தலைவர் அழைத்துள்ளார்.'' என்றார்.
இதைத் தொடர்ந்து பாஜக எம்.பி.நிஷாகந்த் துபே இன்று நாடாளுமன்றத்தில் கூறியதாவது:
''ஒரு பெண்ணை தீவிரவாதி என்பது காந்தியை கொன்றதைவிட மோசமானது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். கோட்ஸேவை தேசபக்தர் எனச்சொல்லும் சிவசேனாவுடன்தான் காங்கிரஸ் இணை ஒரு அரசை அமைத்துள்ளது. காங்கிரஸ் அதிகாரத்திற்கும் எந்த அளவிற்கும் செல்ல முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.'
இவ்வாறு பாஜக எம்.பி.எம்.பி.நிஷாகந்த் துபே தெரிவித்தார்.