

பாஜக போபால் எம்.பி. பிரக்யா தாகூர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரி இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இன்று புதுடெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவையில் நேற்று எஸ்பிஜி திருத்த மசோதா தொடர்பாக விவாதம் நடந்தது. அதில் இடைமறித்துப் பேசிய போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் "தேசபக்தர் என்ற வார்த்தைக்கு எல்லாம் நீங்கள் உதாரணம் அளிக்க முடியாது. கோட்ஸே ஒரு தேசபக்தர்" என்று பேசினார். இதற்கு அவையில் இருந்த காங்கி்ரஸ் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், பிரக்யா தாக்கூரின் வார்த்தைகள் சபைக்குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரக்யா தாக்கூருக்கு எதிராக நேற்று ட்வீட்டரில் தனது கண்டனங்களைத் தெரிவித்தார். அதில், ''பயங்கரவாதி பிரக்யா, பயங்கரவாதி கோட்ஸேவை ஒரு தேசபக்தர் என்று அழைக்கிறார். இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு சோகமான நாள்'' என்று குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மத்திய பிரதேச எம்பிக்கு பலத்த எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தது.
நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசியதால் போபால் எம்.பி.பிரக்யா தாகூர் மீது பாஜக உடனடியாக நடவடிக்கை எடுத்தது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறும்வரையில் எந்தவொரு நாடாளுமன்றக் கட்சி கூட்டங்களிலும் கலந்து கொள்வதற்கு பாஜக தடை விதித்துள்ளது. மேலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்தலைமையிலான பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இதனால் மக்களவையில் இன்று, பிரக்யா தாக்கூர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார், அப்போது, ''காந்தியைப் பற்றிய எனது கருத்து திரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தன்னைக் குறிவைத்து 'தீவிரவாதி' என்று சொல்லைப் பயன்படுத்தி தாக்கியுளார். எவ்வகையிலும் நான் குற்றவாளி அல்ல. ஒரு பெண் அதுவும் ஒரு எம்பியை பார்த்து பயங்கரவாதி என்று காங்கிரஸ் தலைவர் அழைத்துள்ளார்.'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் காந்தியைக் கொன்ற கோட்ஸேவை தேசபக்தர் என்று கூறியதற்காக ''பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கக்கூடாது. அவர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்'' என்று கோரி இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் இன்று புதுடெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.