

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை நம்பிக்கை வாக்கு கோருவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப்பின் கடந்த ஒருமாதமாக பல்வேறு அரசியல் குழப்பங்கள் நடந்தன. இதில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியநிலையில், அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பட்னாவிஸ் 4 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி புதிய அரசை அமைத்து ள்ளன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். 3கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
புதிய டிசம்பர் 3-ம் தேதிக்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றிபெற வேண்டும் என ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை நம்பிக்கை வாக்கு கோருவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத போதிலும், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதாக மகாராஷ்டிர சட்டப்பேரவை வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.