Published : 29 Nov 2019 12:49 PM
Last Updated : 29 Nov 2019 12:49 PM

இந்திய - இலங்கை உறவு மேம்படும்: கோத்தபய ராஜபக்ச திட்டவட்டம்

இந்திய - இலங்கை உறவை மேம்படுத்த விரும்புவதாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு குடியரசு மாளிகையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை அதிபராக இம்மாதம் பதவி ஏற்றவுடன் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை டெல்லி வந்தடைந்தார் கோத்தபய ராஜபக்ச. இதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரை சந்தித்தார் கோத்தபய ராஜபக்ச.

இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய குடியரசு மாளிகைக்கு வருகை தந்த கோத்தபய ராஜபக்சேவை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடியும் உடனிருந்தார்.

மோடி - கோத்தபய ராஜபக்ச சந்திப்பில் பிராந்திய நிலவரம் மற்றும் இரு நாடுகள் உறவுகள் சார்ந்த முக்கிய ஆலோசனைகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசு மாளிகையில் வழங்கப்பட்ட சிறப்பு வரவேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோத்தபய ராஜபக்ச கூறும்போது, “ இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும் மற்றும் பிராந்திய பாதுகாப்புக்காகவும் இந்தியாவும், இலங்கையும் இணைந்து பணியாற்ற வேண்டும். நான் அதிபராக இருக்கும் காலத்தில் இந்திய - இலங்கை உறவை மிக்சிறந்த நிலையில் பராமரிக்க விரும்புகிறேன். வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்தியா - இலங்கை இடையே நீண்ட கால உறவு உள்ளது. இரு நாடுகளும் பாதுகாப்பு , பொருளாதார முன்னேற்றம் மற்றும் மக்களின் நலன் போன்றவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

சமீபத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் சுமார் 54 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை வெற்றி கொண்டார் கோத்தபய ராஜபக்ச. வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா வருவதற்கும் அழைப்பு விடுத்தார். அதன்பேரில் கோத்தபய ராஜபக்ச, மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x