Last Updated : 28 Nov, 2019 09:40 PM

 

Published : 28 Nov 2019 09:40 PM
Last Updated : 28 Nov 2019 09:40 PM

மருத்துவப் பட்டமேற்படிப்பிற்கான நீட் தேர்வில் ஓபிசிக்கு எதிரான அறிவிக்கையை திரும்பப் பெறுக: மக்களவையில் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

புதுடெல்லி

மருத்துவப் பட்டமேற்படிப்பிற்கான நீட் தேர்வில் ஓபிசி எனும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கு எதிரான அறிவிக்கை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மத்திய அரசிடம் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) எம்.பி.யான சு.வெங்கடேசன் மக்களவையில் வலியுறுத்தினார்.

இது குறித்து மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் மக்களவையில் பேசியதாவது:

''அகில இந்திய மருத்துவ உயர் கல்விக்கான நீட் தேர்விற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மட்டும் இல்லை.

அதாவது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கான இட ஒதுக்கீடு உள்ளது. மாநிலங்களின் கல்லூரியிலிருந்து பெறுகிற இடங்களுக்கு ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்படாது என அந்த அறிவிப்பு கூறுகிறது.

இது மிகப் பெரிய அதிர்ச்சியை உண்டாக்குகிறது. நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பிரிவில் சுமார் 3,800 மாணவர்கள் இருக்கிறார்கள். இதில் மிக அதிகம் பாதிக்கப்படுவது தமிழகம்.

தமிழகத்தில்தான் மிக அதிகமான மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இது, பிற்படுத்தப்பட்ட மக்கள் மிக அதிகம் இருக்கும் ஒரு மாநிலம். தமிழக அரசினுடைய இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இன்றைக்கு தமிழகத்திலே அமலில் இருக்கிறது.

இதை மாநில அரசு, மத்திய தொகுப்பிற்கு கொடுப்பதன் மூலம் 23 சதவீதத்தை நாங்கள் இழக்கிறோம். ஏனெனில், 27 தான் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. இப்பொழுது அந்த 27 சதவீதமும் இல்லையென்றால் ஏறக்குறைய 50 சதவீதத்தையும் அதாவது, முழுமுற்றாக இட ஒதுக்கீட்டையும் ஓபிசி பிரிவினர் இழக்கும் மாநிலமாக தமிழகம் மாறிவிடும்.

மிகப்பெரிய ஆபத்து

இந்த அறிவிப்புக்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த பின்னும் இப்பொழுது வரை மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தின் முன்னுதாரணம் ஆகும்.

சமம் அற்றவர்களை சமமாக நடத்தக் கூடாது

சமம் அற்றவர்களை சமமாக நடத்தக்கூடாது என்பது தான் இட ஒதுக்கீட்டின் சாரம். சமூகரீதியாக, கல்விரீதியாக சமமற்றவர்களை சமமாக நடத்தக்கூடாது என்று அரசியல் சாசனம் சொல்கிறது.

ஆழ்ந்த சந்தேகத்தை உருவாக்கும் அரசின் செயல்

அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் இந்த உரிமையை மறுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால் மத்திய அரசின் ஒரு துறை இதனை மறுக்கிறது. அதனை மத்திய அரசு கள்ளத்தனமாக அனுமதிக்கிறது என்றால், இந்த அரசின் செயல் ஆழ்ந்த சந்தேகத்தை உருவாக்குவதாக இருக்கிறது.

முற்றிலும் ஒழிக்கப்படும் இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீட்டையே முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் முயற்சியின் தொடக்கமாக இது இருக்குமோ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே, மத்திய அரசு உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு விரோதமானது

இது அரசியல் சாசன சட்டத்துக்கும், மண்டல் கமிஷன் உடைய அறிக்கைக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் விரோதமானது. பிற்படுத்தப்பட்ட மக்களின் மீதான இந்த இரக்கமற்ற தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட துறையினுடைய இந்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பதை நான் இந்த அவையிலே வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x