Last Updated : 28 Nov, 2019 06:14 PM

 

Published : 28 Nov 2019 06:14 PM
Last Updated : 28 Nov 2019 06:14 PM

விவசாயிகள் கடன் தள்ளுபடி, ஒரு ரூபாய் மருத்துவமனை, வேலைவாய்ப்பில் புதிய திட்டம்: உத்தவ் தாக்கரே அரசு முடிவு: சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை

மும்பையில் என்சிபி செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக், ஜெயந்த் பாட்டீல், சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி | படம்: ஏஎன்ஐ

மும்பை

மகாராஷ்டிராவில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணியில் அமைய உள்ள மகா விகாஸ் அகாதி அரசு முதல் கட்டமாக விவசாயிகள் கடன் தள்ளுபடியையும், வேலைவாய்ப்பில் 80 சதவீதம் உள்ளூரில் வசிப்பவர்களுக்கும் உள்மாநில மக்களுக்கே முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து ஒரு மாதத்துக்குப் பின் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் இணைந்து மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசை அமைக்க உள்ளன. மாநிலத்தின் முதல்வராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவி ஏற்க உள்ளார். மூன்று கட்சிகளும் தங்களுக்கு இடையே குறைந்த பட்ச செயல்திட்டத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் ஆட்சி அமைத்துள்ளன.

இந்தத் திட்டம் குறித்து என்சிபி செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக், ஜெயந்த் பாட்டீல், சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இன்று மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் முதல் கட்டமாக விவசாயிகள் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

தேர்தலலில் வாக்குறுதி அளித்த வகையில் ஏழைகளுக்கு உதவும் வகையில் மாநிலம் முழுவதும் ஒரு ரூபாய் மருத்துவமனை தொடங்கப்படும். இந்த மருத்துவமனையில் மக்களுக்குக் குறைந்தபட்ச மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும்.

சிவசேனாவின் முக்கிய வாக்குறுதியாகத் தேர்தலின்போது இருந்தது 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டமாகும். அதை நிறைவேற்றுவோம். அதுமட்டுமல்லாமல் வேலைவாய்ப்பில் 80 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கச் சட்டம் கொண்டு வரப்படும்" எனத் தெரிவித்தனர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்கவில்லை

உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவி ஏற்கும் விழாவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால், இருவரும் பங்கேற்கவில்லை.

தன்னால் பங்கேற்க இயலாது என்று உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் மூலம் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்

உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா காந்தி அனுப்பியுள்ள கடிதத்தில், " உங்கள் தலைமையில் அமையும் அரசு மகாராஷ்டிரா மக்களின் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் என நம்புகிறேன். நீங்களும் புதிய அரசும் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகள்.

பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பிரதிநிதிகளையும் பங்கேற்க அறிவுறுத்தியுள்ளேன்.
காங்கிரஸ், சிவசேனா, என்சிபி கட்சிகள் கூட்டுறவுடன் இருந்து மகாராஷ்டிரா மக்களுக்கு நிலையான அரசை வழங்கும் என்று நம்புகிறேன். பொறுப்புள்ள அரசாக இருந்து அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகத்தின் மாண்புகளையும் கட்டிக்காக்கும் என நம்பிக்கையிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

தலா 2 அமைச்சர்கள்

மும்பையில் இன்று மாலை நடக்கும் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் என்சிபி, காங்கிரஸ், சிவசேனா தரப்பில் தலா 2 அமைச்சர்கள் மட்டும் பதவி ஏற்றுக்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்சிபி சார்பில் ஜெயந்த் பாட்டீல், சாஹன் பூஜ்பால், காங்கிரஸ் தரப்பில் பாலசாஹேப் தோரட், நிதின் ராவத் ஆகியோரும் பதவி ஏற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x