

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் மதச்சார்பின்மை, ஒருமைப்பாட்டுக்கு சாதகமானது. தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தல் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கலியாகஞ்ச் தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் தபன் தேப் சின்ஹா, கரக்பூர் சதார் தொகுதியில் பிரதீப் சர்க்கார், கரீம்பூர் தொகுதியில் சின்ஹா ராய் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக வசம் இருந்த கரக்பூர் சர்தார் தொகுதியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வசம் வந்துள்ளது.
இந்த வெற்றி குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
" 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த வெற்றியை நாங்கள் மாநிலத்தின் மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம்.
இந்த வெற்றி என்பது மதச்சார்பின்மை மற்றும் ஒற்றுமைக்கு ஆதரவாகக் கிடைத்த வெற்றி. மேற்கு வங்க மாநிலத்தில் தேசிய குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். இந்தத் தேர்தல் மூலம் பாஜகவின் அகந்தைக்கும், மக்களை மதிக்காமல் இருந்ததற்கும் நல்ல விலை கொடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாஜகவைப் புறக்கணித்திருக்கிறார்கள். என்ஆர்சி சட்டம் மூலம் அகதிகளை சட்டபூர்வ குடிமகனாக மாற்றவும், அவர்களை தடுப்புக் காவலில் வைக்கவும் மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தோல்வி அடைந்துவிட்டது. மதரீதியான பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் செய்வது வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா, ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை கிடைக்காமல் தோற்றுவிட்டது. இது மக்கள் பாஜகவுக்கு எதிரான மனநிலைக்கு மாறுகிறார்கள் என்பதையே பிரதிபலிக்கிறது.
பாஜகவுக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது. பாஜக அரசு, வேலைவாய்ப்பையோ அல்லது வளர்ச்சியையோ உருவாக்கவில்லை. மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்துவதிலும், மற்றவர்களை மிரட்டுவதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கூட அங்கு தனது மிதமிஞ்சிய நம்பிக்கை மற்றும் தந்திரத்தால் ஆட்சி அமைத்தாலும் தேசத்து மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று பாஜக நினைக்கக் கூடாது''.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.