வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்துக: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்துக: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்
Updated on
1 min read

வெங்காய விலையைக் கட்டுப்படுத்துமாறு மத்திய அரசுக்கு மக்களவையில் இன்று திமுக வலியுறுத்தியது. அக்கட்சியின் தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி இதை வலியுறுத்தினார்.

இதுகுறித்து திமுகவின் மக்களவை துணைத்தலைவருமான கனிமொழி பேசியதாவது:

''வெங்காய விலை மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது நான்கு மடங்கு கூட அதிகமாகியிருக்கிறது. இதனால் நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரின் குடும்பங்கள் கடுமையான சிக்கலைச் சந்திக்கின்றன. அவர்களால் உணவுத் தேவையின் முக்கிய அங்கமான வெங்காயத்தை வாங்க முடியவில்லை.

தமிழ்நாடு, டெல்லி, மும்பை என நாட்டின் பல பகுதிகளில் கிலோ நூறு ரூபாய்கும் அதிகமாக வெங்காய விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. சட்ட விரோதமாக வெங்காயம் பதுக்கப்படுவதன் காரணமாகவும், மழையின் காரணமாகவும் இந்த விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக வர்த்தக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மேலும், தேசிய விவசாயக் கூட்டுறவு வாணிபக் கழகம் வெங்காயத்தை கிடங்குகளில் பாதுகாப்பதில் பாரம்பரியமான முறையையே பின்பற்றுவதால் சேமிக்கப்பட்ட வெங்காயத்தின் பெரும்பகுதி வீணாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட பின்னரும் கூட அதன் விலை குறைந்தபாடில்லை. இன்று நாட்டில் பற்றி எரியக் கூடிய பிரச்சினையாக வெங்காய விலை உயர்வு இருக்கும்போது மத்திய அரசு, வெங்காய விலையைக் கட்டுப்படுத்த என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன். இதற்காக குறுகிய கால விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்த வேண்டும்''.

இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in